பிரதீபா... தமிழகத்தில் நீட் பறித்த இரண்டாவது உயிர்! | Villupuram student Pradeepa ends her life after failed in NEET exam; shock in Tamilnadu!

வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (05/06/2018)

கடைசி தொடர்பு:13:02 (05/06/2018)

பிரதீபா... தமிழகத்தில் நீட் பறித்த இரண்டாவது உயிர்!

அனிதா - பிரதிபா - நீட் தேர்வால் தற்கொலை

மிழகத்தில் நீட் தேர்வு முடிவில் வெற்றி பெற முடியாமல் போனதால் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது மாநிலம் முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு 'நீட்' தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு (2017) உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடிய பின்னரும், ஒருவழியாக நீட் தேர்வு நடத்தப்பட்டது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கு தேசிய அளவிலான தகுதிகாண் தேர்வான நீட், இந்தாண்டு இரண்டாவது ஆண்டாக நடத்தி முடிக்கப்பட்டது. சென்ற ஆண்டு, நீட் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு நிலவிய சூழ்நிலையில், இந்தாண்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் மனநிலை, தமிழ்நாட்டுக்குள் தேர்வு மையங்களை அளித்தால் போதும் என்ற அளவுக்கு கொண்டுவந்து விட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் நீட் தேர்வு கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீட் தேர்வுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தில் கிராமப்புற ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயில ஏதுவாக, அவர்கள் மேல்நிலைத் தேர்வில் (ப்ளஸ் டூ) பெறும் மதிப்பெண்களின் கட்-ஆப் விகித அடிப்படையில், இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன. இந்த நிலை 2015-ம் ஆண்டுவரை மட்டுமே. அந்த ஆண்டு 'நீட்' தேர்வு கட்டாயம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படுவதை அறிந்த, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகம் போன்ற மாநிலத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, அதற்கு அடுத்த கல்வியாண்டு (2016) மட்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 

இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் அரசியல் நிலைமை படிப்படியாக மாறிவிட, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், முற்றிலும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு விட்டது. ஜெயலலிதா வழியில் செயல்படுவதாகச் சொல்லிக்கொண்டே, அவர் எந்தெந்தத் திட்டங்களை எல்லாம் எதிர்த்தாரோ, அவை அனைத்துக்கும் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு பச்சைக்கொடி காட்டி, மத்திய பி.ஜே.பி. அரசுக்கான தங்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

அனிதாஇந்த நிலையில்தான், "உச்ச நீதிமன்றம்வரை சென்று போராடியும் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லையே; டாக்டராக வேண்டும் தன் வாழ்நாள் கனவு பலிக்கவில்லையே" என்ற துக்கத்தில் கடந்த ஆண்டு அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தையே உலுக்கிய அந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த போதிலும், நீட் தேர்வை நடத்தாமல் தவிர்க்க முடியவில்லை. திட்டமிட்டபடி நீட் தேர்வு நடத்தப்பட்ட பின்னரே மருத்துவப் படிப்பில், மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர்.

நீட் தேர்வு உறுதி என்றானவுடன், தமிழகம் முழுவதும், இந்தத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கும் மையங்கள் காளான்கள் போல் முளைக்கத் தொடங்கி விட்டன. பள்ளிகளிலேயே நீட் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தபோதிலும், தனியார் பள்ளிகள் ஒருபுறம் நீட் தேர்வைக் காரணம்காட்டி தங்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்திய நிலையிலும், இந்த ஆண்டு நீட் தேர்வு, பல குளறுபடிகளுடன் நடந்தேறியது.

கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சோக முடிவை தேடிக் கொண்ட பிரதீபாவின் தந்தை ஒரு கூலித்தொழிலாளி. 

ப்ளஸ் டூ தேர்வில் பிரதீபா 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நீட் தேர்வில் 39  மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மனமுடைந்த அவர், எலி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதன் அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்றாலும், அதற்கான பண வசதி இல்லாததால், இந்த ஆண்டு நீட் தேர்வெழுதி, அரசு மருத்துவக் கல்லூரியில் சேரலாம் என்று நினைத்திருந்தார். ஆனால், நீட் தோல்வி காரணமாக விரக்தியில் பிரதீபா தன் வாழ்வை முடித்துக்கொண்டிருப்பது, அதிர்ச்சியையும், தமிழகம் முழுவதும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதிபா மாணவி அனிதா தற்கொலையின் சோகச் சுவடுகள் மறையும் முன், அதற்கு அடுத்தாண்டே மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சியை அடுத்த பெரவலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபாவின் தந்தை கட்டட வேலைக்குச் செல்கிறார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரதீபா, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண் பெற்றிருந்தார். ப்ளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண் எடுத்திருந்தார்.

நீட் தேர்வின் நீட்சி, தமிழகத்தில் இருந்து மருத்துவராக வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளின் கனவைச் சிதைத்துள்ளது. ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினால் மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதி என்ற நிலை தற்போது முற்றிலுமாக மாற்றப்பட்டு விட்டது. சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை போன்ற நகரங்களில் பயிலும் வசதியான மாணவ-மாணவிகளே பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்கான ஆயத்தங்களுடன், நீட் தேர்வுக்கு என்று தனியாக 'கோச்சிங்' சென்றால்தான் அந்தத் தேர்வில் பயிற்சி பெற முடியும் என்ற நிலைதான் உள்ளது. அப்படி இருக்கும்போது, குக்கிராமங்களில் இருந்து, இரண்டு-மூன்று கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று கல்வி பயிலும் சாமான்ய மாணவ-மாணவிகளின் டாக்டர் கனவு, இனி வருங்காலங்களில் கானல் நீராகிப் போய் விடுமோ என்று அச்சம்  வருகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்க்கையில், ``என்னங்க சார் உங்க சட்டம்....? என்னங்க சார் உங்க திட்டம்...? கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம்...." என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close