`தலைமுறை கனவை அடக்கம்செய்து நகர்வோம்’ - பிரதீபா தற்கொலையால் பா.இரஞ்சித் உள்ளக்குமுறல்

`கல்வி உரிமை மறுப்பை நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள்' என நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட்

விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12-ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று வந்த நீட் தேர்வு முடிவில், அவர் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில், அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். பிரதீபா, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவப் படிப்பில் சேரவில்லை. 

பிரதீபாவின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற வருடம் அனிதா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல, இந்த வருடம் மீண்டும் ஒரு மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பா.இரஞ்சித், “நீட் மற்றொரு படுகொலையை நிகழ்த்திவிட்டது. கல்வி உரிமை மறுப்பு நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள். வழக்கம்போல படிக்கத் திறன் அற்றவர்கள், சாவதே மேல் என எழுதித் தள்ளுவார்கள். யாரிடம் நம் உரிமையைக் கேட்கிறோம் என்று உணராமலே, தலைமுறை கனவை அடக்கம் செய்து நகர்வோம். அடுத்த படுகொலைகள் நோக்கி!” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!