`பிளாஸ்டிக் தடை எப்போது?’ ஆண்டு, தேதியை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

2019-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

பிளாஸ்டிக் தடை குறித்து முதல்வர்..
 

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ம் தேதி, உலக சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்' (Beat Plastic Pollution) என்பதே இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாளின் கருப்பொருள். இதை ஐ.நா சபை முன் வைத்துள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிக்கும் முயற்சியைத் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

 சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், ''பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வுசெய்யும் வல்லுநர் குழு ஜெயலலிதாவால் அமைக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருள்களைத் தடைசெய்ய வல்லுநர் குழு ஆலோசனை வழங்கியது. பிளாஸ்டிக் தட்டுகள் போன்றவற்றுக்குப் பதில் பாரம்பர்யமாகப் பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டைத் தட்டுகள், தாமரை இலைகள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்க வல்லுநர் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் தண்ணீர் மாசடைகிறது.

எனவே, 2019-ம் ஆண்டு முதல் மக்காத பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த, உற்பத்தி செய்ய தடை விதிக்கப்படும். பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருள்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் தயாரிக்கலாம். மனித உயிருக்கும் சுகாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் குடம், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தமிழகத்தில் ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!