வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (05/06/2018)

கடைசி தொடர்பு:13:48 (05/06/2018)

`சென்னையில் கொள்ளை; அரக்கோணத்தில் மெகா சேல்ஸ்’ -போலீஸை கலங்கடித்த கொள்ளையன்

கொள்ளையன்

சென்னையில் உள்ள கடைகளில் கொள்ளை அடித்த பொருள்களை குறைந்த விலைக்கு அரக்கோணத்தில் விற்ற பிரபல கொள்ளையன் போலீஸாரிடம் சிக்கியுள்ளான். 

சென்னையில் உள்ள கடைகளின் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவந்தன.  இதுதொடர்பாக செங்குன்றம், ராயப்பேட்டை, அண்ணாநகர், சேலையூர், கோட்டூர்புரம், கொரட்டூர், அரும்பாக்கம் உள்ளிட்ட 17  போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளை நடந்த கடைகளின் முன்பு சில்வர் நிற ஸ்கார்பியோ கார் ஒன்று நீண்ட நேரம் நிற்பது தெரியவந்தது.

கொள்ளைப் பொருள்

அந்த கார் யாருடையது என்று போலீஸார் விசாரித்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க மயிலாப்பூர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன்ராஜ் மற்றும் போலீஸார் பார்த்தசாரதி, அகிலன், சுகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.  தனிப்படை போலீஸாருக்கு ஷட்டர் கொள்ளையர்கள் குறித்து முக்கிய தகவல் கிடைத்தது. சென்னை பாடி பகுதியில் சில்வர் நிற ஸ்கார்பியோ காரில் கொள்ளையர்கள் வரும் தகவல் கிடைத்ததும் தனிப்படை போலீஸார் அவர்களை பின்தொடர்ந்தனர்.  கொள்ளையர்களின் கார், ராயப்பேட்டை நோக்கி விரைந்து வந்தது. போலீஸாரும் அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தனர். ராயப்பேட்டை கதீட்ரல் சாலையில் போலீஸார், பின்தொடர்வதை காரின் கண்ணாடி மூலம் தெரிந்த கொள்ளையர்கள் காரின் வேகத்தை அதிகரித்தனர். இதனால் போலீஸார், தடுப்புகளை ஏற்படுத்தி காரை மடக்கினர். ஆனால், தடுப்புகளை உடைத்துக் கொண்டு கொள்ளையர்களின் கார் சென்றது. இருப்பினும் சினிமாவைப்போல கொள்ளையர்களின் காரை வழிமறித்து நின்றது போலீஸின் டாடா சுமோ. இதனால் காரை விட்டு கீழே இறங்கிய கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீஸ் டீம் மடக்கிப் பிடித்தது.

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கொளத்தூரைச் சேர்ந்த சையத் சர்பராஸ் நவாஸ், முகமது செரீன், கொரட்டூரைச் சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ வெள்ளி, 820 கைக்கடிகாரங்கள், டி.வி-க்கள், 2 கார்கள் மற்றும் மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``இந்தக் கும்பலுக்குத் தலைவனாக சையத் சர்பராஸ் நவாஸ் செயல்பட்டுள்ளார். இரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கொள்ளையடிப்பதை தொழிலாக செய்துவருகிறார். சிறு வயது முதல் அவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏழு முறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியில் வந்ததும் மீண்டும் கொள்ளையடிக்கத் தொடங்கிவிடுவார். அவரின் மைத்துனர் முகமது செரீன். செரீனின் அக்காளைத்தான் சையத் சர்பராஸ் நவாஸ் திருமணம் செய்துள்ளார். இவர்களின் நண்பன்தான் ராஜா.

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள்

இந்தக் கும்பல் பகலில் ஸ்கார்பியோ காரில் சென்று கடைகளை நோட்டமிடுவார்கள். பிறகு, இரவில் கடை மூடப்பட்ட பிறகு ஷட்டரின் அருகில் காரை நிறுத்திவிட்டு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பார்கள். பிறகு திருடிய பொருள்களை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றுவிடுவார்கள். சென்னையில் மட்டும் 31 கடைகளில் இந்தக் கும்பல் கைவரிசைக் காட்டியுள்ளது. சையத் சர்பராஸ் நவாஸ், தான் கொள்ளையடித்த எலெக்ட்ரானிக் பொருள்களை  அரக்கோணத்தில் 'மெகா சேல்ஸ்' என்ற பெயரில்  குறைந்த விலைக்கு விற்றுள்ளார். இதனால் அவரின் கடையில் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது. ரூ.20,000 மதிப்புள்ள எல்.சி.டி. டிவிக்களை வெறும் ரூ.10,000க்கு விற்றுள்ளனர்.  மேலும், சையத் சர்பராஸ் நவாஸ் தான் திருடும் விலையுயர்ந்த எல்இடி மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்ய முடியாத வகையில் அவைகளை தன் உறவுக்கார பெண்களுக்கு பரிசாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். தனது உறவினரான முகமது செரீனுக்கு சென்னையில் செல்போன் மற்றும் வாட்ச் ஷோரூம் வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தான் திருடிய வாட்ச்களை கைவசம் வைத்துள்ளார். ஆனால், அதற்குள் எங்களிடம் சிக்கிவிட்டார்" என்றனர்.

சையத் சர்பராஸ் நவாஸை போலீஸார் விரட்டிப் பிடித்தபோது அவரின் கால் முறிந்துள்ளது. மேலும் அவரை மீண்டும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.