`கடந்த ஆண்டு அனிதா; இந்த ஆண்டு பிரதீபாவை இழந்திருக்கிறோம்' - `நீட்'டால் பேரவையில் ஸ்டாலின் காட்டம்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அடுத்து, இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். 

ஸ்டாலின்

விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா 12-ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று வந்த நீட் தேர்வு முடிவில், அவர் 39 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில், அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, தி.மு.க செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு தொடர்பான சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதில் பேசிய அவர், ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். சென்ற வருடம் மாணவி அனிதா, இந்த வருடம் பிரதீபா. இன்னும் எத்தனை பேரை நீட் தேர்வினால் நாம் பறிகொடுக்கப்போகிறோம்? சி.பி.எஸ்.இ தவறான கேள்வித்தாளை வழங்கியதால்தான் தமிழக மாணவர்கள் மதிபெண்கள் எடுக்க முடியாமல்போனது. நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில், வட மாநில மாணவர்கள் மட்டுமே அதிகம் தேர்ச்சிபெற்றுள்ளனர். நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்க்கிறது” எனக் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் நீட் தேர்வை அரசு ஏற்றுக்கொண்டது என்று தெரிவித்தார். அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனக்கூறி, சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்புசெய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!