' பா.ஜ.க மடியில் ரஜினி விழுந்துவிடக் கூடாது!'  - ராகுலுக்கு திருநாவுக்கரசரின் அலெர்ட்

' ரஜினிக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், தென்னிந்தியாவின் நம்முடைய பலம் அதிகரிக்கும்' என ராகுல்காந்தியின் கவனத்துக்குத் தகவலைக் கொண்டு சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர் என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். 

ரஜினிகாந்த்

' காலா திரைப்படத்தை வெளியிட மாட்டோம்' என கர்நாடக அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளன. இதனால், காலா படம் ரிலீஸாகுமா என்ற அச்சம், படக்குழுவினர் மத்தியில் நிலவி வருகிறது. ' ரஜினிக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், தென்னிந்தியாவின் நம்முடைய பலம் அதிகரிக்கும்' என ராகுல்காந்தியின் கவனத்துக்குத் தகவலைக் கொண்டு சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர் என்கின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். 

பா.ஜ.கவுக்கு எதிராக நாடு முழுவதும் மதச்சார்பற்ற அணியைக் கட்டமைப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் ராகுல்காந்தி. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மூன்றாம் அணி என்ற முயற்சியில் இருந்த சில கட்சிகளும் பின்வாங்கிவிட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல, இந்தமுறையும் வெற்றியைப் பறிகொடுக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. அதன் காரணமாக, தி.மு.க உடன் கூட்டணி சேருவதில் உறுதியாக இருக்கிறார் சோனியா காந்தி. இதுகுறித்து ராகுலிடம் பேசியவர், ' எவ்வளவு இடங்கள் தி.மு.க கூட்டணியில் கிடைக்கிறதோ, அதைப் பெற்றுக் கொண்டால் போதும். தொகுதிகளுக்காகக் கருத்து மோதல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். கூட்டணிதான் முக்கியம்' என உறுதியாகக் கூறிவிட்டார். ஆனால், கடந்த சில நாள்களாக தமிழக அரசியல் களத்தில் நடைபெற்று வரும் காட்சிகளை, அகில இந்திய கட்சிகள் உற்று கவனிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதன் ஒருபகுதியாக ரஜினிகாந்த் மீது பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளனர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள்.  

திருநாவுக்கரசர்`` அரசியல்களத்தைப் பொறுத்தவரையில், தேர்தல் சோதனையில் இறங்காத வரையில் புதிய கட்சிகளுக்கு எப்போதும் ஒரு மவுசு உண்டு. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே, அந்தக் கட்சியின் உண்மையான செல்வாக்கு என்ன என்பது வெளிஉலகுக்குத் தெரியவரும். அந்தவகையில், ரஜினியின் அரசியல் என்ட்ரியை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கியுள்ளன தேசிய கட்சிகள். ' பா.ஜ.கவைச் சேர்ந்த சிலர் ரஜினிக்கு ஆலோசனை கூறி வந்தாலும், அவர்கள் மடியில் அவர் விழுந்துவிடக் கூடாது' என்ற கவலையும் காங்கிரஸ் நிர்வாகிகளை வாட்டத் தொடங்கியிருக்கிறது" என விவரித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், " தமிழக அரசியல் களநிலவரம் தொடர்பாக, ராகுலுக்கு நெருக்கமான அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் கவனத்துக்குச் சில தகவல்களைக் கொண்டு சேர்த்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர். அவர் அளித்த தகவலில், ' ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க டெபாசிட்டைப் பறிகொடுத்தது. வரக் கூடிய தேர்தலில் ரஜினி பக்கம் கணிசமான வாக்காளர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அரசியல்ரீதியாக பா.ஜ.கவை ஆதரிக்கக் கூடிய சிறிய கட்சிகளை, காங்கிரஸ் எதிர்க்க வேண்டும். சில இடங்களில் அரசியல் நிர்பந்தம் காரணமாக அமைதியாக இருக்கிறோம். பட்டியலின சமூக மக்கள் மத்தியிலும் மொழிவழி சிறுபான்மை மக்கள் மத்தியிலும் ரஜினிக்குக் கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. 

மதச்சார்பு, மதச்சார்பின்மை என எந்த முடிவையும் இன்னமும் ரஜினி எடுக்கவில்லை. அவரை பா.ஜ.க பக்கம் விடுவதன் மூலம், நமக்குத்தான் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும். ரஜினியை ஒரு ஆப்ஷனாக நாம் கையில் எடுக்கலாம். தினகரனுக்கு குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும்தான் சமூகரீதியான ஆதரவு இருக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால், வேறு எங்கும் பெரிதாக அவருக்கு செல்வாக்கு இல்லை. தினகரனைவிடவும் ரஜினி எவ்வளவோ மேல். ரஜினியின் வருகை, சில அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. வரும் நாள்களில் ரஜினிக்கு ஆதரவான அறிக்கைகளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவல் ராகுலின் கவனத்துக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. 'சமூக விரோதிகள்' எனக் கூறி விமர்சனத்தை ரஜினி எதிர்கொண்ட அதே காலகட்டத்தில்தான், இப்படியொரு தகவலை டெல்லிக்குக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார் திருநாவுக்கரசர். இதே கருத்தில் சிதம்பரமும் உறுதியாக இருக்கிறார். ' பா.ஜ.க பக்கம் ரஜினி போய்ச் சேர்ந்துவிடக் கூடாது' என நிர்வாகிகளிடம் அவர் பேசியிருக்கிறார். ' ரஜினி மீது சிறிய கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லிவிடக் கூடாது' என்பதிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெளிவாக இருக்கின்றனர்" என்றனர் விரிவாக. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!