வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (05/06/2018)

கடைசி தொடர்பு:14:44 (05/06/2018)

தூத்துக்குடி முன்னாள் கலெக்டர் வெங்கடேஷிடம் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தில்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது கலெக்டராக இருந்த வெங்கடேஷிடம் தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் மதுரையில் வைத்து இன்று விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கலவரத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டும் பொதுமக்கள், காவல்துறையினர் பலர் காயமடைந்தும் பொதுச் சொத்துகள் சேதமடைந்த சம்பவத்தால் தூத்துக்குடி இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில், இந்தச் சம்பவங்கள் நடந்தபோது அங்கு கலெக்டராக இருந்த வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன் உடனடியாக மாற்றப்பட்டார்கள்.  

தூத்துக்குடி வெங்கடேஷ்


இந்தக்கலவரம் பற்றி விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்துள்ளது. சமூக ஆர்வலர்களும் உண்மை அறியும் குழுக்களை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான  பபுல் தத்தா, ராஜ்பீர்சிங், லால்பகர், நிதின்குமார், அருண் தியாகி ஆகியோர் கடந்த இரண்டு நாள்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களிடமும் காவல்துறையினரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து இன்று மதுரை விமான நிலையத்திலுள்ள வி.ஐ.பி.அறைக்கு முன்னாள் கலெக்டர் வெங்கடேஷை வரவைத்து விசாரணை நடத்தினார்கள். தூத்துக்குடிக்கு அவரை வரவழைத்து விசாரணை நடத்தாமல், மதுரை விமான நிலையத்தில் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. காலை 10  மணிமுதல் 12.30 வரை விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து மிகவும் பதற்றத்துடன் வெளியில் வந்தார் வெங்கடேஷ். முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி.மகேந்திரனிடம் நேற்று மாலை விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. வருகிற 7-ம் தேதி வரை தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தவுள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க