'சார், உங்க வீட்டில் கொள்ளை போயிருக்கு'- வீட்டு ஓனருக்குச் சென்ற போன்கால்

ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை மற்றும் பணம் இருந்த லாக்கரை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் லாக்கரை தூக்கிச் சென்ற சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது. 

                                         கொள்ளை நடந்த வீடு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரின் மனைவி சுசீலா. இவர் விளந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இந்தத் தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். இதனால் பழனிச்சாமியும், அவரது மனைவி சுசீலாவும் விளந்தை கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 2-ம் தேதி மகளைப் பார்க்க சென்னை சென்றுள்ளார் பழனிச்சாமி. 

இந்த நிலையில், பழனிச்சாமியின் வீடு திறந்து கிடந்ததைப் பார்த்த அக்கம், பக்கத்தினர், ஆண்டிமடம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஒரு அறையில் இருந்த 2 பீரோக்கள் திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து சென்னையில் உள்ள பழனிச்சாமியை செல்போன் மூலம் போலீஸார் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது, ``சார், உங்கள் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது. உடனடியாக புறப்பட்டு வாருங்கள்'' என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி, வீட்டின் படுக்கை அறையில் நகைகள், பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு லாக்கர் உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதன்பேரில் போலீஸார் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது நகை, லாக்கர் இருந்தற்கான தடயமே தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து, சென்னையிலிருந்து ஊருக்குப் புறப்பட்டு வந்தார் பழனிச்சாமி. 

                                 மோப்ப நாயுடன் போலீஸ்

மர்ம நபர்கள் வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட்டின் மீது ஏறிக் குதித்து, கதவின் தாழ்ப்பாளை வெளியே இருந்து ஜன்னல் வழியாகக் கம்பியால் நெம்பி உடைத்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களைத் திறந்து நகை, பணம் உள்ளதா? என்று பார்த்துள்ளனர். அதில், எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள், படுக்கை அறைக்குச் சென்று நகை-பணம் இருந்த இரும்பு லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாமல் போகவே, இரும்பு லாக்கரை அப்படியே தூக்கிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் மோப்ப நாய் வரவழைத்தனர். திருட்டு நடந்த வீட்டிலிருந்து ஓடி கொளப்பாடி சாலையில் நின்றது. யாரையும் பிடிக்கவில்லை. மேலும் தடயங்களைச் சேகரித்தனர். 

வீட்டில் திருட்டு போன இரும்பு லாக்கரில் எவ்வளவு நகை, பணம் இருந்தது என பழனிச்சாமியிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, லாக்கரில் வீடு மற்றும் நில பத்திரங்கள், 19 பவுன் நகைகள், ரூ.12,000 ரொக்கம் மற்றும் அரைக் கிலோ வெள்ளிப் பொருள்கள் இருந்ததாகத் தெரிவித்தார். இந்தத் திருட்டு சம்பவம் குறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!