`காலா வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்!’ - கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

`காலா' படத்தை வெளியிட்டே ஆகவேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினி குரல் கொடுத்திருந்தார். இதனால் அவரின் `காலா' படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்குப் பல கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கன்னட திரைப்பட வர்த்தக சபையும் கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் எனக் கூறியிருந்தனர். காவிரி பிரச்னை ஒரு புறம் இருக்க, கர்நாடகாவில் காலா பிரச்னையும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 

இந்நிலையில், கர்நாடகாவில் காலாவைத் தடையில்லாமல் வெளியிட வேண்டும் என்றும் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நடிகரும், காலா படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட்டே ஆக வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.  அதேநேரம், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், கர்நாடகாவில் எந்தெந்த தியேட்டர்களில் காலா வெளியாகிறது என்ற விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாரிப்பாளர் தனுஷுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!