வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (05/06/2018)

கடைசி தொடர்பு:16:10 (05/06/2018)

350 மார்க் எடுத்தால்தான் ப்ளஸ் ஒன் சீட்! - கறார் காட்டிய அரசுப் பள்ளி தலைமையாசிரியர்; அதிரடி காட்டிய கலெக்டர்

 அரசுப் பள்ளி மாணவர்கள்

`350 மார்க்குக்கு மேல் எடுத்தவர்களுக்கே பதினொன்றாம் வகுப்புகளில் அனுமதி' என்று உத்தரவு போட்ட அரசுப் பள்ளியின் மீது புகார் கொடுத்து, மாவட்ட நிர்வாகத்தை விட்டு நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறார் வழக்கறிஞர் ஒருவர்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் இருக்கிறது நெரூர். இந்த ஊராட்சியில் உள்ள அரங்கநாதன்பேட்டையில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. `இந்தப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர வேண்டுமென்றால் மாணவ- மாணவிகள் 350 க்கு மேல் மார்க் எடுத்திருக்க வேண்டும்' என்று அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும், பள்ளி ஆசிரியர்களும் கண்டிப்பாக உத்தரவு போட்டுச் செயல்படுத்தினார்களாம். இதனால், 350க்குக் கீழ் மார்க் எடுத்த மாணவ- மாணவிகள் அந்தப் பள்ளியில் சேர முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். அந்தப் பகுதி மாணவ- மாணவிகள் அனைவரும் வறுமை நிலைமையில் உள்ளவர்கள் என்பதாலும், அருகில் வேறு எந்த மேல்நிலைப்பள்ளிகளும் இல்லாத சூழ்நிலையாலும் மேல்நிலை கல்வியைப் பயில முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் எவ்வளவோ மன்றாடியும், அவர் அந்த மாணவ- மாணவிகளை பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்திருக்கிறார். இதனால், `தங்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி கற்கும் நிலை கேள்விக்குறியானதால் செய்வதறியாது அல்லாடி வந்திருக்கிறார்கள். இந்தத் தகவல் வழக்கறிஞரும் மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளருமான தமிழ் ராஜேந்திரன் கவனத்துக்குப் போயிருக்கிறது. 

உடனே, அவர் இந்தத் தகவலை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். உடனே, அரங்கநாதன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்த ஆட்சித்தலைவர், லெஃப்ட் அண்ட் ரைட் விட்டிருக்கிறார். ``அரசுப் பள்ளிகள் எல்லாம் எதற்கு உள்ளது?. ஏழை மாணவர்கள், கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்கள் நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகத்தானே. அதற்கு இப்படி நீங்கள் தடை போட்டால், எப்படி அவர்கள் நல்ல கல்வியைப் பெற முடியும்?. உடனே சம்பந்தப்பட்ட மாணவ- மாணவிகளை பள்ளியில் சேருங்கள். இல்லையென்றால், உங்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால், நடுங்கிப்போன அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கையோடு போய் அந்த 350க்குக் கீழ் மார்க் எடுத்த மாணவ- மாணவிகளை பதினொன்றாம் வகுப்பில் சேர்த்திருக்கிறார்.

நம்மிடம் பேசிய வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், ``100 சதவிகிதம் ரிசல்டை காண்பித்து, பெற்றோர்களிடம் பணம் பிடுங்க தனியார்ப் பள்ளிகள்தாம் இப்படி அதிக மார்க் வாங்கும் மாணவர்களை மட்டும் பள்ளியில் சேர்ப்பார்கள். அந்தப் பாணியை அரங்கநாதன்பேட்டை அரசுப் பள்ளியும் செய்தது என்னைக் கொதிக்க வைத்துவிட்டது. அதிக மார்க் வாங்கும் மாணவர்களுக்குக் கல்வி போதிக்க ஆசிரியர்கள் தேவையில்லை. சுமாராகப் படிக்கும், குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பதுதான் ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தும். ஆனால், அரசுப் பள்ளியிலேயே இப்படிச் செய்தது மோசமான முன்னுதாரணம். அதனால்தான், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்தேன். மறுபடியும் அந்தப் பள்ளி இதுபோன்ற தவற்றைச் செய்தால், எங்கள் நடவடிக்கை மோசமா இருக்கும்" என்று எச்சரித்தார்.