வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (05/06/2018)

கடைசி தொடர்பு:16:25 (05/06/2018)

`எங்களால் விசாரிக்க முடியாது'- நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைக் காரணம் காட்டிய நீதிபதிகள்

நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க கோரிய மனுவினை ஜூன் 11 ம் தேதிக்கு ஒத்திவைப்பு .

நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி. டி கே.ரங்கராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ``நாடு முழுவதும் 2018- 2019ம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு மே 6 ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வில் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாகத் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கி உத்தரவிட வேண்டும் அல்லது ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும். மேலும் நீட் தேர்வு முடிவுக்கு இடைகால தடைவிதித்து உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்புதால் இந்த வழக்கினை இங்கு விசாரிக்க இயலாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக காலஅவகாசம் கோரியதால் வழக்கினை வரும் 11 தேதிக்கு ஒத்திவைத்தனர்.