`` `ஆன்மிக அரசியல்' என்பது ஒரு பிசினஸ்!'' - ரஜினியை இடிக்கிறாரா சத்யராஜ்?

நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் சத்யராஜ் குறித்த கட்டுரை..

`` `ஆன்மிக அரசியல்' என்பது ஒரு பிசினஸ்!'' - ரஜினியை இடிக்கிறாரா சத்யராஜ்?

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை, பெரியார் திடலில் நேற்று சிறப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

சத்யராஜ்

``கலைஞர் என்பது சித்தாந்தம்!''

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், நடிகர் ரஜினிகாந்த் களமிறங்கியிருக்கும் ஆன்மிக அரசியல் குறித்து வறுத்தெடுத்துவிட்டார். இதுகுறித்து அவர், ``கலைஞர் என்பது பெயர், உருவம் அல்ல... அவர் ஒரு சித்தாந்தம்; அவர் ஒரு தத்துவம். அதுதான் கலைஞர். கடைசி நம்பிக்கையாக இருக்கிற நீதியும் கைவிட்டு விடும்போதுதான் சமுதாயம் புரட்சியின்மீது நம்பிக்கை வைக்கிறது. அதாவது, சமுதாயம் புரட்சியின்மீதும் போராட்டத்தின்மீதும் நம்பிக்கை வைக்கிறது. ஒரு நாடு சுடுகாடாக மாறுவதற்காகப் போராட்டத்தின்மீது நம்பிக்கை வைப்பதில்லை. ஒரு நாடு, சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகப் போராட வேண்டியிருக்கிறது. அதை, எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். இதைவிட வேற உதாரணத்தை எங்கிருந்து எடுக்க முடியும்? . கலைஞருடைய களப்பணி என்பது என்ன? சமூக அநீதிக்கு எதிராகப் போராடுவது. குறிப்பிட்ட சாதியில் பிறந்தவன் உயர்ந்தவன்; குறிப்பிட்ட சாதியில் பிறந்தவன் தாழ்ந்தவன். ஆணாகப் பிறந்தவன் உயர்ந்தவன்; பெண்ணாகப் பிறந்தவர் தாழ்ந்தவர் என்பது சமூக அநீதி. இதற்கு எதிராக முன்னெடுக்கும் ஒரு போராட்டம்தான் சமூக நீதி. அதை, கலைஞர் எல்லா வகையிலும் முன்னெடுத்திருக்கிறார். பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை என்பதற்கு அவர் கொண்டுவந்த சட்டம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது. பிறப்பால் ஆண் உயர்ந்தவன்; பெண் தாழ்ந்தவர் அல்ல என்பதற்காக அவர் கொண்டுவந்த சட்டம் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை என்பது. 

அரசியல் என்பது என்ன?

அரசியல் என்பதுகூட ஒரு சமூக சேவைதான். கலைஞர் அரசியலில் காலடி எடுத்துவைத்தது அவருடைய 14-வது வயதில். அந்த 14 வயது பையனுக்கு, தான் கொண்ட கொள்கையின் மீதும், லட்சியத்தின் மீதும் அய்யா பெரியாரின் சுயமரியாதை மீதும் அவருடைய கருத்துகளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தான் நம்பிய கொள்கைகளுக்காக எந்தவிதமான சுயநலமும் பார்க்காமல் களத்தில் இறங்கினார் அல்லவா, அதுதான் அரசியல். சமூகச் சேவைதான் அரசியல். 14 வயது பையன் இந்திக்கு எதிராகக் குரல் கொடுக்கும்போது, அவர் மனதில் எதிர்காலத்தில் நாம் முதல்வர் ஆவோம் என்கிற கனவு ஒரு துளியாவது இருக்க வாய்ப்புண்டா? அது 14 வயது பையனுக்கு எப்படி இருக்கும்? எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, தான் நம்பிய கொள்கைக்காக, சுயமரியாதைக்காக அப்படியே களத்தில் இறங்கி நம்முடைய தொழில் என்ன ஆகும், நாம் சிறைக்குப் போவோமா, மாட்டோமா என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் வருவதற்குப் பெயர்தான் அரசியல்; அதுதான் சமூக சேவை. 

கருணாநிதியுடன், ரஜினி

 

ஆனால், திட்டம் போட்டு, கணக்குப் போட்டு வருவதற்குப் பெயர் அரசியல் அல்ல... அது பிசினஸ். பிசினஸ் என்பது என்னவென்றால், உதாரணத்துக்கு இப்போது வேப்பேரியில் ஒரு கடை போடலாம்; ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். இதற்கு என்ன பிளான் பண்ணுவோம்? இங்கே சைவ ஹோட்டல் வைத்தால் நல்லா போகுமா அல்லது அசைவ ஹோட்டல் வைத்தால் நல்லா போகுமா என்று யோசிப்போம். இதுதவிர, ஏற்கெனவே சைவம், அசைவம் இரண்டும் இருக்கிறது. இதனால், சைனீஸைப் போடலாமா அல்லது இங்கே வேற எந்தமாதிரியான வியாபாரம் ஆரம்பித்தால் எப்படியிருக்கும் அல்லது இங்கே ஒரு ஹோட்டலை மூடி அங்கே வேறு ஏதாவது வெற்றிடம் இருக்கிறதா என்று யோசிப்போம். அப்படிக் கணக்குப் போட்டு வருவதற்குப் பெயர் பிசினஸ். அது, அரசியல் அல்ல... அந்தப் பிசினஸுக்கு ஏதோ ஒரு பெயர் வைக்கக் கூடாது. அதை, ஒரு பிசினஸ் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். 

``நிம்மதியாக இருக்கிறேன்!''

அரசியல் என்றால் அப்படியே களத்தில் குதித்துவிட வேண்டும். உங்களுக்கு ஓர் அநீதி நடக்கிறது என்றால், அப்படியே உள்ளே இறங்குவதற்குப் பெயர்தான் அரசியல். நீங்கள் பிசினஸுக்குள் வந்துவிட்டு அதற்கு ஒரு பெயர் வைக்கக் கூடாது. `ஆன்மிக அரசியல்' என்று அந்தப் பிசினஸுக்கு ஒரு பெயர். ஆன்மிக அரசியலைப் பொறுத்துவரை எனக்குத் தோன்றுவது என்னவென்றால், இரும்புக்கரம் கொண்டு அடக்குவது ஆன்மிக அரசியல் அல்ல... அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதுதான் ஆன்மிக அரசியல். நாம் என்ன நிம்மதியைத் தேடி மலைக்கா போகிறோம்? ஆனால், நாம் தெளிவாக இருக்கிறோம்; நிம்மதியாக இருக்கிறோம். இதற்குக் காரணம், நாம் பெரியார் திடலில் படித்தவர்கள் என்பதால். நான் எப்போதும் நிம்மதியாகத்தான் இருப்பேன். பல் துலக்குவது, ஷேவ் செய்வது என எல்லாவற்றையும் நிம்மதியுடன்தான் செய்கிறேன். இட்லி, தோசை சாப்பிடுவதைக்கூட நிம்மதியுடன்தான் சாப்பிடுகிறேன். இதனால் தெளிவாக இருக்கிறேன். இதற்குக் காரணம், தந்தை பெரியார் கொடுத்த அறிவு. நான், ஒரு பன்ச் டயலாக்கைக்கூட தந்தை பெரியாரை வைத்துதான் பேசுவேன். எனக்கு மேலே முடி இல்லை. ஆனால், நாங்கள் எல்லாம் தலைக்குமேல் இருப்பவர்களை நம்பி வாழ்கிறவர்கள் அல்ல... தலைக்குள்ளே இருக்கிறவர்களை நம்பி வாழ்கிறவர்கள். ஏனென்றால், தலைக்கு மேல் இருப்பது ஜெனிடிக்ஸ். அதாவது, என் தாய் மாமனுக்கு முடி இல்லை. என் தந்தைக்கு முடி இல்லை. அதுபோல எனக்கும் முடி இல்லை. ஆனால், உள்ளே இருப்பது அய்யா (பெரியார்) கொடுத்தது. அது கொட்டாது; வளர்ந்துகொண்டுதான் இருக்கும்'' என்றார் அரங்கத்தில் சிரிப்பொலியும் கரவொலியும் அதிர.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் ரஜினியின் ஆன்மிக அரசியலை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!