கோவை சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு..! | Clash between Coimbatore Prisoners: One death

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (05/06/2018)

கடைசி தொடர்பு:17:20 (05/06/2018)

கோவை சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு..!

கோவை, மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கைதி பலி

கோவை மத்திய சிறை கைதியாக இருப்பவர்கள் விஜய்(19) மற்றும் ரமேஷ்(45). இருவரும் அடிதடி வழக்கில், கைதாகி மத்திய சிறையில் இருந்துவந்தனர். இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் இருவருக்கும் சிறை வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கைதி விஜய், பெரிய கல் ஒன்றை எடுத்து, ரமேஷ்மீது போட்டுள்ளார். இதில், காயமடைந்த ரமேஷ், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார்.

உயிரிழந்த ரமேஷ் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவரைத்தாக்கிய விஜய் பேரூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், ரமேஷ் மற்றும் விஜய் இருவருக்கும் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சிறைக்குள் அவ்வளவு பெரிய கல் வந்தது எப்படி? மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிந்தும் அவர்களை எதற்காக ஒரே அறையில் வைத்திருந்தனர்? எனப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து, ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.