வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (05/06/2018)

கடைசி தொடர்பு:17:40 (05/06/2018)

விழிஞ்ஞம் துறைமுகத்துக்குக் கடல்வழியாகப் பாறாங்கல் கொண்டுசெல்ல குமரியில் எதிர்ப்பு!

கன்னியாகுமரி மாவட்ட கனிம வளங்கள் கேரளத்துக்கு லாரிகள் கடத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இந்த நிலையில் குமரி மலைகளை அழித்து விழிஞ்ஞம் துறைமுகத்திற்குத் தேவையான பாறங்கற்களை தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் வழியாகக் கொண்டுசெல்ல எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ன்னியாகுமரி மாவட்ட கனிம வளங்கள் லாரிகள் மூலமாகக் கேரளத்துக்குக்  கடத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இந்த நிலையில் குமரி மலைகளை அழித்து விழிஞ்ஞம் துறைமுகத்துக்குத் தேவையான பாறாங்கற்களை தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் வழியாகக் கொண்டுசெல்ல எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

மீன்பிடி துறைமுகம்

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் ரூ.7500 கோடி செலவில் வர்த்தகத் துறைமுகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. துறைமுகத் திட்டத்துக்கான கட்டுமானப்பணியில் அதானி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. துறைமுகத்துக்கான கடலலை தடுப்பணை அமைக்க பெரிய பாறாங்கற்கள் கடலில் போடப்படுகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக மலைகளை உடைத்துக் கற்களை எடுக்க அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்துத் துறைமுகக் கட்டுமானத்துக்கான பாறாங்கற்கள், மண் உள்ளிட்டவற்றைக் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குமரி மாவட்ட மலைகளை உடைத்துப் பெரிய பாறாங்கற்களை விழிஞ்ஞத்துக்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும், குமரி மாவட்ட நிர்வாகமும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரிய கற்களை சாலை வழியாகக் கொண்டுசெல்ல முடியாது என்பதால், விழிஞ்ஞத்திலிருந்து சுமார் 25 நாட்டிக்கல் மயில் தூரத்தில் அமைந்துள்ள தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மிதவைக் கப்பல்கள் மூலம் எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மீன்வளத்துறை சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் நாளை காலை 11 மணிக்குக் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் தீபா துறைமுகப் பயனீட்டாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ``தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விழிஞ்ஞம் துறைமுகத்துக்குக் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்வது தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் 6.6.2018 அன்று காலை 11 மணிக்குத் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை நேரடியாகத் தெரிவிக்கலாம்" எனக் கூறப்படுகிறது.

குமரி மாவட்டத்திலிருந்து லாரிகள் மூலம் கல், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை கடத்துவதற்கு குமரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடல் மார்க்கமாகப் பெரிய துறைமுகத்துக்குத் தேவையான கற்கள் உள்ளிட்டவை எடுத்துச்செல்ல நாளை நடக்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.