`ஒரு லட்சம் சம்பளம்; சீனாவில் வேலை'- இளைஞர்களின் கனவைச் சிதைத்த டிராவல்ஸ் அதிபர்

``ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் சீனாவில் வேலையிருப்பதாகக் கூறிய எங்களிடம் பணத்தை மோசடி செய்த டிராவல்ஸ் அதிபர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் ஆட்சித் தலைவரிடம் பாதிக்கப்பட்ட 10 இளைஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

                                    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் 

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் தாலுகா, கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, மேல்நாரியப்பனூரைச் சேர்ந்த மாசிலாமணி உட்பட 10க்கும் மேற்பட்டோருடன் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு டிஎஸ்பி-யிடம் கொடுத்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள்.

``பெரம்பலூர் மாவட்டம், அம்மாப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மயில்வாகனன் என்பவர் கடந்த ஓராண்டாக நன்கு அறிமுகமானவர். பெரம்பலூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். அவர் எங்களிடம் வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை உள்ளது. 20 ஆட்கள் வேண்டும் எனக் கேட்டார். இதன்படி மயில்வாகனன் மூலமாகச் சீனாவிலுள்ள ஹாங்காங்கில் எலக்ட்ரானிக் பேக்கிங் செய்யும் கூலி வேலைக்கு, விழுப்புரம் மாவட்டம், சின்ன சேலம் தாலுகா, ஈரியூரைச் சேர்ந்த முருகேசன், குமார் முரளி, மகா விஷ்ணு, பழனி உட்பட 18 பேரிடம் ஒரு மாதத்துக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் தருகிறார்கள் என ஒவ்வொரு நபரிடமும் வேலைபெற்று தருவதற்காக மயில்வாகனன் கேட்டதன் பேரில் ரூ.1.10 லட்சம் வீதம் 18 நபர்களிடம் 20 லட்சம் வசூலித்துக் கொடுத்துள்ளோம். 

இதன்மூலம் மயில்வாகனன் தனது மேலாளர் பாலு என்பவரிடம் பேசி 18 பேருக்கும் ஹாங்காங் செல்வதற்காக பிப்ரவரி 8ம் தேதி விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்தனர். அதன்படி பணங்கொடுத்த எல்லோரும் சென்னை விமான நிலையத்துக்குச் சென்றோம். ஆனால் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. மீண்டும் பிப்ரவரி 21ம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு வரவழைத்து டிக்கெட், விசா ஆகியவற்றை மேலாளர் பாலு கொடுத்தார். அவற்றைப் பரிசோதித்த விமானநிலைய விசாரணை அதிகாரிகள், ``இது ஹாங்காங் செல்வதற்கான டிக்கெட் இல்லை. பேங்காக் வரை மட்டுமே இதில் செல்லமுடியும். சீனாவுக்குப் போகமுடியாது" என்று கூறி எங்களை விமானநிலையத்திலிருந்து வெளியேற்றினார்கள். இதைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.                          

அப்போதே மயில்வாகனத்திடம் போனில் பேசியபோது, ``சிறு தவறு நடந்துவிட்டது. உங்கள் பணத்தை ஒருவாரத்துக்குள் தந்துவிடுகிறேன்" எனக்கூறியதால் ஊருக்குத் திரும்பினோம். ஆனால், சொன்னபடி பணத்தைத் தராமல் நாள்களைக் கடத்தி வந்தார். பின்னர் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு வராமல் இருந்து வந்தார். நேற்று அவர் அம்மாப்பாளையத்தில் இருப்பதாகத் தகவலறிந்து ஊரில் சென்று பார்த்தபோது, ``எதற்காக இங்கு வருகிறீர்கள், போய்விடுங்கள், உங்களைக் கொன்று விடுவேன்" எனக்கூறி மிரட்டினார். இதனால் எங்கள் பணத்தை மயில்வாகனனிடமிருந்து முழுமையாகப் பெற்றுத்தர வேண்டும்" என்று கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!