தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 6 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில், பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 6 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் 7 பேரின் உடல்களை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும், "மறு உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். 3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும். எய்ம்ஸ் அல்லது ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், மாவட்டத்தின் நீதிபதி கட்டாயம் இருக்க வேண்டும். உடற்கூறாய்வுக்குப் பிறகு, நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" எனக் கூறி வழக்கை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதன்படி, 3 சிறப்பு அரசு மருத்துவா்கள், ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா் அம்பிகா பிரசாந்த் பத்ரா மற்றும் நீதிபதிகள் தலைமையில் கடந்த 31.5.2018 காலை 11.35 முதல் மறுநாள் 1.6.2018-ம் தேதி, அதிகாலை 2.10 மணி வரை ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் சிறப்பு அனுமதியுடன் 7 பேரின்  உடல்களும் தொடர்ச்சியாக மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் கடந்த 31-ம் தேதி சண்முகம், செல்வசேகர் மற்றும் கார்த்திக் ஆகியோரின் உடல்களும், ஜூன் 1-ம் தேதி கந்தையா மற்றும் காளியப்பன் ஆகியோரின் உடல்களும் 2-ம் தேதி தமிழரசனின் உடலும், இன்று 3.6.2018 ஸ்னோலினின் உடலும் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில் நாளை (6.6.2018) விசாரிக்க வேண்டிய வழக்கை, அவசர வழக்காகக் கருதி இன்று விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல்கள் மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் மீதமுள்ள பதப்படுத்தி வைக்கப்பட்ட ரஞ்சித்குமார், மணிராஜ், அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி மற்றும் ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்களை எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவில் உடற்கூறாய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!