`தமிழிசையை இதற்காகத்தான் வசைபாடினேன்`- சிறையிலிருந்து கொந்தளிக்கும் சூர்யா தேவி 

தமிழிசை

``பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை ஓவராகப் பேசுகிறார். இதனால்தான் அவரை விமர்சித்தேன்'' என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா தேவியைச் சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசையைத் தரக்குறைவாக விமர்சித்த திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த சூர்யா தேவியை போலீஸார் கைது செய்து சென்னைப் புழல் பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். அவரை வழக்கறிஞர் தமிழ்வேந்தன், நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்வேந்தனிடம், சூர்யா தேவி பல தகவல்களைச் சொல்லியிருக்கிறார். 

இதுகுறித்து தமிழ்வேந்தன் கூறுகையில், ``உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதற்கு முன்பு சூர்யா தேவி எனக்கு அறிமுகம் கிடையாது. தமிழிசை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூர்யா தேவியைச் சந்திக்க என்னுடைய முகநூல் நண்பர்கள் வேண்டுகோள்விடுத்தனர். இதனால் நேற்று மாலை 3 மணியளவில் சென்னைப் புழல் பெண்கள் சிறைக்குச் சென்றேன். சிறைத்துறை அனுமதி பெற்று மாலை 3.10க்கு உள்ளே சென்று சூர்யா தேவியைச் சந்தித்தேன். 4 மணிக்குச் சிறையிலிருந்து வெளியில் வந்தேன். சுமார் 50 நிமிடங்கள் அவரிடம் பேசினேன். 
 
 தமிழ்வேந்தன்முதலில் என் பெயரை அவரிடம் தெரிவித்தவுடன் ஹெச்.ராஜா மீது வழக்கு போட்டீங்களே என்றார் சூர்யா தேவி. அதன்பிறகு சூர்யா தேவி என்னிடம், சமூக அவலங்களைத்தான் ஃபேஸ்புக்கில் வீடியோவாகப் பதிவு செய்தேன். எனக்கும் தமிழிசைக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. சம்பவத்தன்று சென்னையில் உள்ள தோழி வீட்டுக்குக் குழந்தைகளுடன் வந்திருந்தேன். என்னை போலீஸார் தேடும் தகவல் தெரிந்ததும் விருகம்பாக்கத்தில் உள்ள லாட்ஜுக்குச் சென்று தங்கினேன். ஆனால், என்னை போலீஸார் கைதுசெய்துவிட்டனர். தற்போது என்னுடைய இரண்டு குழந்தைகளையும் அப்பா கவனித்துவருகிறார். 

 இதற்கு முன்பு பல சமூக அவலங்களை குறிப்பிட்டு வீடியோ பதிவு செய்துள்ளேன். ஆனால், அதற்கெல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழிசை மேடம் ஓவராகப் பேசுகிறார். இதனால்தான் அவர் குறித்த தகவல்களை வீடியோவாகப் பதிவுசெய்தேன். பெண் பத்திரிகையாளர்களை அநாகரிகமாகப் பேசிய எஸ்.வி. சேகரை கைது செய்ய போலீஸார் தயங்குகின்றனர். ஆனால், தமிழிசையை விமர்சித்தற்காக என்னை போலீஸார் கைதுசெய்துவிட்டனர். என்னைச் சிறையில் அடைத்தாலும் எனக்கு எந்தவித கவலையும் இல்லை. வெளியில் வந்ததும் தொடர்ந்து என்னுடைய சமூக சேவையைச் செய்வேன் என்று சூர்யா தேவி என்னிடம் தெரிவித்தார். 

 சூர்யா தேவி மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் அவர் தைரியமாகத்தான் இருக்கிறார்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!