`தீர்வுகளுக்கு எளிதான விளக்கம்’ - அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திறந்த கலெக்டர் பெருமிதம்

"நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கல்வியில் புதுமையைப் புகுத்தி நல்லதொரு வளர்ச்சிப்பாதையை நோக்கிச் செல்கிறது" என சேங்கல் உயர்நிலைப்பள்ளியில் மெய்நிகர் வகுப்பைத் (smart class room) தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சேங்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மெய்நிகர் வகுப்பை (smart class room) மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் இன்று (5.6.2018) தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பேசிய அவர், "கல்வியின் வளர்ச்சிக்காக
14 வகையான திட்டங்களை வழங்கி வரும் தமிழக அரசுப் பாடத்திட்டங்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி செயல்முறை வகுப்பு, விளையாட்டு வாயிலாகக் கற்றல் உள்ளிட்ட பல்வேறு புதிய யுக்திகளைப் பயன்படுத்தி வருகிறது. மேலும், கல்வியை மாணவ, மாணவிகளுக்கு எளிதாக வழங்கிடவும், உலக அறிவை வழங்கிடவும் மெய்நிகர் வகுப்புகளைத் தொடங்கி வருகிறது. இந்த மெய்நிகர் வகுப்புகள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பாடங்களைப் பல்வேறு செயல்விளக்கம் வாயிலாக வழங்கலாம்.

பாடத்திட்டத்துக்கான விளக்கம், பல்வேறு மேற்கோள்கள் மூலம் எளிதாகப் பதிவிறக்கம் செய்து கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு பயன்படுத்தலாம். இந்த மெய்நிகர் வகுப்பு மூலம் ஆரம்பக்கல்வி முதலே கணினி வழிக் கல்வியை இணைந்து வழங்க இயலும். இதனால் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் தீர்வுகளுக்கு எளிதான விளக்கமும் பயிற்சிகளும் வழங்க இயலும். இந்த அரிய வாய்ப்பை ஆசிரியர்கள் முழுமையாகக் கற்று, மாணவ, மாணவிகளுக்கு வழங்கி உலகளாவிய கல்வியைப் பெறச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!