`நீட்'டுக்கு எதிராக ஒன்று சேருங்கள்' - 5 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் | M.K Stalin urge the other State Chief Ministers to oppose the NEET

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (05/06/2018)

கடைசி தொடர்பு:20:20 (05/06/2018)

`நீட்'டுக்கு எதிராக ஒன்று சேருங்கள்' - 5 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோர வேண்டும் எனப் பா.ஜ.க அல்லாத மாநில முதல்வர்களுக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஸ்டாலின்

நீட் தேர்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இந்தத் தேர்வில் சி.பி.எஸ்.இ தொடர்பான கேள்விகள் மட்டுமே அதிகம் கேட்கப்படுகின்றன. இதனால் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களும் ஏழை மாணவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கேட்டு இரண்டு வருடங்களாகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வு எழுதித் தோல்வியடைந்த விரக்தியால் தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் மிகப் பெரும் போராட்டங்களும் நடைபெற்று ஓய்ந்தன. 

இதைத்தொடர்ந்து இந்த வருடம் நடைபெற்றத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது மேலும் பல பிரச்னைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தமிழக மாணவர்கள் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றிருந்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி இந்த வருட நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டார். இரண்டு வருடங்களாக நீட் தேர்வால் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி பிரதீபா மரணம் மற்றும் நீட் தேர்வு தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து மாநில முதல்வர்களும் ஒன்று சேர வேண்டும் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாகப் பலவீனமாக உள்ள மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய பி.ஜே.பி இல்லாத மாநிலங்களின் முதல்வர் இணைந்து நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.