வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (05/06/2018)

கடைசி தொடர்பு:20:40 (05/06/2018)

`தீய சக்திகள் ஊடுருவியதா?’ - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி உண்மை கண்டறியும் குழு விளக்கம்

``தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தீய சக்திகள் ஊடுருவியதாகக் கூறுவது உண்மைக்கு மாறானது'' என உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற 100 வது நாள் போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.  இதனிடையே தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து உண்மை அறியும் குழு என்ற தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தூத்துக்குடியில் தமிழக அரசு வேண்டுமென்றே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டினர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கச்சூட்டில் 104 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

மேலும் பொதுமக்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தீய சக்திகள் யாரும் ஈடுபடவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர். தற்போது அமைக்கப்பட்டுள்ள நீதி விசாரணை ஆணையத்தில் எவ்வித உண்மையும் வெளிவரப்போவதில்லை என்றும் பணியில் உள்ள நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.  துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குறித்து போலியான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.