`பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தவே மாட்டோம்!’ - சத்தீஸ்கர் குடும்பத்தின் 4 ஆண்டு உறுதி

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளைக் கருத்தில்கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். 

பிளாஸ்டிக்

உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீண்டநாள்கள் மக்காமல் மண்ணையும் நீரையும் பாழ்படுத்தும் பிளாஸ்டிக்தான் இன்றைய சூழலில் இயற்கையின் முதல் எதிரி. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் ஒத்துழைப்பின்றி பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாது என்பதே நிதர்சனம். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகச் சட்டப்பேரவையில் விதி எண் 110கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 2019ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றிருக்கின்றனர். பிளாஸ்டிக் பயன்பாடு இயற்கையின் சமநிலையைக் குலைப்பதோடு, வன விலங்குகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் உயிருக்கு எமனாக மாறிவிடுகிறது. சமீபத்தில் தாய்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்துக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அதன் வயிற்றிலிருந்து 8 கிலோ எடை கொண்ட 80க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை எடுத்தனர். திமிங்கலத்தைக் காப்பாற்ற அவர்கள் 5 நாள்களாக எடுத்த முயற்சி கடைசியில் தோல்வியில் முடிந்தது. 

இன்றைய சூழலில் பிளாஸ்டிக் இல்லாமல் நம்மால் ஒரு நாளை கழிக்க முடியுமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு அன்றாடத் தேவையாக பிளாஸ்டிக் மாறிப்போயிருக்கிறது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையிலும் எங்களால் பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தினர் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கடந்த 4 ஆண்டுகளில் முழுமையாகத் தவிர்த்து முன்மாதிரியாக இருந்து வருகிறார்கள்.

சத்தீஸ்கர் குடும்பம்

Photo Credit: ANI

தாண்டேவாடா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர், சுற்றுச்சூழலுக்கு எமனான பிளாஸ்டிக்கை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பயன்படுத்துவதில்லை என உறுதி எடுத்துக்கொண்டதாகக் கூறுகின்றனர். இதுகுறித்துப் பேசிய குடும்ப உறுப்பினர் ஒருவர், ``பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை அறிந்து அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வழக்கமாக்க முடிவு செய்தோம். பிளாஸ்டிக் பயன்பாடு நிச்சயம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. மழை காலங்களில் மழைநீர் வடிகால்களிலும், சாக்கடைகளிலும் ஏற்படும் அடைப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டு மனம் நொந்து, இனிமேல் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது என்ற முடிவை நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எடுத்தோம்’’என்கிறார்கள். இந்தக் குடும்பத்தினரைப் பின்பற்றி நாமும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கலாமே?...
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!