வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (05/06/2018)

கடைசி தொடர்பு:21:44 (05/06/2018)

`என்னைப் படிக்க உள்ளே விடுங்கள்' - தந்தையுடன் பள்ளி வாயில் முன்பு போராடும் மாணவன்

திருப்பூர் தனியார் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக இலவசக் கல்வி பயிலும் 1-ம் வகுப்பு மாணவனை, ''பணம் கட்டினால்தான் உள்ளே விடுவோம்'' எனப் பள்ளி நிர்வாகம் வெளியேற்றியதாகப் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

திருப்பூரில் இயங்கிவரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு பயின்று வருகிறார் மாணவர் காந்திஜி. இப்பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக எல்.கே.ஜி முதலே இலவசக் கல்வி பெற்றுவரும் மாணவர் காந்திஜியை, இன்றைய தினம் பள்ளிக்குள் வர விடாமல், நுழைவுவாயில் பகுதியிலேயே தடுத்து நிறுத்தி, நிர்வாகத்தினர் திருப்பி அனுப்பியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை பழனிக்குமார், தன் மகனுக்கு நீதி கேட்டு பள்ளி நுழைவுவாயில் முன்பாகக் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினார். மாணவனும் தந்தையும் பள்ளி வளாகத்தின் முன்பாக சாலையில் நின்றுகொண்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மாணவனின் தந்தை பழனிக்குமார், "என் மகன் இந்தப் பள்ளியில்தான் எல்.கே.ஜி-யிலிருந்து படித்து வருகிறான். கல்வி உரிமைச் சட்டத்தின் மூலமாக இலவசக் கல்வியைப் பெற மிகவும் போராடியே இங்கு என் மகனை சேர்த்திருக்கிறேன். எல்.கே.ஜி முடியும்வரை பள்ளி நிர்வாகத்தினர் என் மகனுக்கு புத்தகங்களே கொடுக்கவில்லை. பின்னர், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் என் மகனுக்கு யு.கே.ஜி-யில் பாடப் புத்தகங்களைக் கொடுத்தார்கள். மேலும் சென்ற ஆண்டு கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், இந்தப் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம்  இலவசமாகப் படிக்கும் மாணவர்களிடம், பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி பணம் வசூலித்ததைத் தெரிவித்தேன். அதைத்தொடர்ந்து இலவசக் கல்வி பெரும் மாணவர்களிடம் வசூலித்த பணத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்குமாறு பள்ளி நிர்வாகத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு என்மீது கோபம் அதிகரித்தது.

அதையடுத்து பள்ளியில் நடைபெறும் எந்தவொரு பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திலும் என்னைக் கலந்துகொள்ள அனுமதிக்கமாட்டார்கள். இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து நேற்றைய தினம் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. நேற்றைய தினமே என் மகனை உள்ளே விடாமல் தடுக்க முயன்றார்கள். நான் எதிர்த்துக் கேள்வி கேட்டதால் பின்னர் உள்ளே அனுமதித்தார்கள். நான் மகனை பள்ளிக்குள் அழைத்துச் சென்று 1-ம் வகுப்பு அறையில் அமர வைத்துவிட்டு வந்தேன். இந்நிலையில் இன்றைய தினம் வழக்கம்போல என் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோதுதான், பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் நின்றுகொண்டு இருந்த உடற்கல்வி ஆசிரியர்களும் செக்யூரிட்டிகளும் என் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி, சாவியைப் பறித்துக்கொண்டார்கள். மேலும் 20,000 வரை கட்டணம் செலுத்தினால்தான் என் மகனை பள்ளிக்குள் அனுமதிப்போம் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவித்தார்கள். அப்படியென்றால் அதை எழுத்துபூர்வமாக எழுதித் தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சம்மதிக்காமல் என்னையும் என் மகனையும் வெளியேற்றிவிட்டார்கள். இலவசக் கல்வி பயிலும் மாணவனிடம் எதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். என் மகனுக்கு நீதி கிடைக்கும்வரை என் போராட்டத்தைத் தொடருவேன்'' என்றார் கோபமாக.

புகார் குறித்து பள்ளியின் துணைத் தலைவர் கோவிந்தப்பனிடம் பேசினோம். "கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தப் பள்ளியில் பயிலும் எந்த மாணவர்களிடமும் நாங்கள் கல்விக் கட்டணம் வசூலிப்பது இல்லை. ஸ்டேசனரீஸ், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட Extra curricular activities-க்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறோம். அதுவும் அவரிடம் கேட்டது ரூபாய் 7,585 மட்டுமே. இது இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும். அதற்குண்டான ரசீதும் வழங்கிவிடுகிறோம். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டு பள்ளிக்கு களங்கத்தை ஏற்படுத்த முயல்கிறார்'' என்றார்.

''அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும்'' என்று கோரிக்கை எழுந்துள்ளது.