வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/06/2018)

கடைசி தொடர்பு:23:00 (05/06/2018)

`என் வார்த்தையை எனர்ஜியா எடுத்து 1125 மார்க் எடுத்தாள்'- பிரதீபாவின் உடலைப் பார்த்துக் கதறிய தந்தை

அரியலூர் மாணவி அனிதாவை அடுத்து, செஞ்சி மாணவி பிரதீபாவையும் பலி வாங்கிவிட்டது நீட். பிளஸ் டூவில் 1125 மதிபெண் பெற்று டாக்டர் கனவோடு நீட்டை எதிர்கொண்ட பிரதீபாவுக்குக் கிடைத்தது டாக்டர் சீட் இல்லை, மரணம் மட்டுமே. சென்ற ஆண்டே நீட்டில் 135 மதிபெண் பெற்ற பிரதீபா இந்த ஆண்டு நிச்சயம் நீட்டில் வெற்றிபெறுவேன். அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி டாக்டர் ஆவேன் என்று லட்சியத்தோடு கோச்சிங் சென்டருக்குச் சென்று படித்து நீட் எழுதினார். ஆனால், இந்த ஆண்டு  நீட்டில் பிரதீபாவுக்குக் கிடைத்த மார்க் 39. இதனால் மனமுடைந்து போய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் பிரதீபா.

பிரதீபா

மனமுடைந்து போய் உட்கார்ந்து இருந்த பிரதீபாவின் அப்பா சண்முகத்திடம் பேசினோம். ``என் பொண்ணு 10வதுல 490 மார்க் வாங்கி ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துச்சு. அப்பவே சொல்லிடுச்சு நான் டாக்டராதான் ஆவேனு. நானும் உன் இஷ்டம்போல படிமா உன்னால எவ்ளோ படிக்க முடியுமோ அதுவரைக்கும் படி. உனக்கு சப்போர்ட்டா நான் உங்க அம்மா அண்ணன் இருக்கோம் என்றேன். அதையே ஒரு எனர்ஜியா எடுத்துகிட்டு பிளஸ் டூ-ல 1125 மார்க் வாங்குச்சு. ஆனா இந்தப் பாழாப்போன நீட் வந்து எம் பொண்ண கொன்னுடுச்சி. போன மாசம் நீட் எக்ஸாம் எழுதிட்டு வந்ததும், கொஸ்டீன் பேப்பர்லயே தமிழை தப்பு தப்பா குளறுபடி செஞ்சு வெச்சு இருக்காங்க. அதால 4 மார்க் கூடுதலாக எனக்குப் போடவேண்டும்ணு அரசுக்கு லெட்டர் போடுறனு சொல்லுச்சு. நானும் சரிமா போடுனு சொன்னேன். அதுவும் சரினு சொல்லுச்சு. ஆனா இபோ வந்த ரிசல்ட்ல மார்க்க பார்த்துட்டு பாவி மவ இப்படி பண்ணிப்புடுச்சு சார்" என்றவர்,

 ``வசதி இல்லாமதான் அரசாங்க பள்ளியில சேர்த்தோம் அங்கையே இவ்வளவு மார்க் எடுத்து இருக்கு.  நாங்க வசதியா இருந்து தனியார் பள்ளியில சேர்த்து இருந்த எம் பொண்ணு டாக்டர் ஆயிருப்பா சார். அரசாங்க பள்ளியில எங்க சார் இங்லீஷ் கத்துத்தராங்க. அது ஒழுங்க தெரிஞ்சா எம் பொண்ண நான் இழந்திருக்கமாட்டேன். 1 வதுல இருந்து 12 வது வரைக்கும் அரசுப் பள்ளியில இங்லீஷ் மீடியம் கொண்டு வரணும்.

பிரதீபா

அப்பதான் இந்த நீட்டை எதிர்க்க முடியும் அரசுப் பள்ளி மாணவர்களால. தமிழகத்துக்கு  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அப்பதான் எம் பொண்ணு மாதிரி இன்னொரு பொண்ண நீட்டுக்கு பலி கொடுக்காமல் இந்தத் தமிழ்நாடு இருக்கும். இல்லையென்றால் வருடா வருடம் அனிதாவையும், பிரதீபாவையும் இழந்துகொண்டேதான் இருப்போம்" என்று பூ மாலையால் அலங்கரிக்கப்பட்ட தன் மகளைப் பார்த்து கதறினார்.

இதுகுறித்து பெரவளூர் கிராம மக்கள் கூறுகையில், பிரதீபாவின் குடும்பத்துக்கு 50 லட்சம் தரவேண்டும் என்றும் பிரதீபாவின் அண்ணன் அல்லது அக்காவுக்கு அரசு வேலை தரவேண்டும் என்றும் நிரந்தரமாக நீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க