வெளியிடப்பட்ட நேரம்: 20:18 (05/06/2018)

கடைசி தொடர்பு:20:52 (05/06/2018)

``ஆள்பவர்கள் பேச வேண்டியதை ஆழ்வார்பேட்டையார் பேசலாமா?'' - கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

குமாரசாமி கமல்

கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்து காவிரி நீர் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நேற்று பெங்களூரு சென்றார். அங்கு, முதல்வர் குமாரசாமியைச் சந்தித்த பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, கமல் கூறுகையில், ``அரசியல் தலைவராக இங்குவந்து முதல்வரைச் சந்திக்கவில்லை. மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன். இது குறுவைச் சாகுபடி. அதை நினைவூட்டவே வந்தேன். காவிரிப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையில் அணிலாகவும் பாலமாகவும் இருப்பேன். இந்தச் சந்திப்பு நல்ல முறையில் நடந்தது. காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

இந்தச் சந்திப்புக்குத் தமிழக அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழக விவசாயச் சங்கங்களும்கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக நதிநீர் விவகாரங்கள், பொதுநல வழக்குகளின் சட்ட வல்லுநரும் எழுத்தாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ``கடந்த பல ஆண்டுகளில் இருபது முறைக்கு மேல் காவிரிப் பிரச்னையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், நடுவர்மன்றம், மேலாண்மை வாரியம் என அலைக்கழிக்கப்பட்ட அரசியலை கமல் அறிவாரா அல்லது அதுகுறித்து யாரிடமாவது தகவலைக் கேட்டறிந்தாரா? தசாவதாரம் என்ற பெயரில் சாதனை செய்ய, ஒருவரே அரிதாரங்களையும் பூசிக்கொண்டு எல்லா வேடங்களையும் போட்டுத் திரையில் கைத்தட்டல் வாங்குவதற்கு இது என்ன சினிமாவா?

இறுதியாகப் பெற்ற தீர்ப்பு என்பது பலகட்டத்தில் நடந்த சட்டப் போராட்டத்தின் மூலம் பெற்ற உரிமை. இதனை நிலைநாட்டுவது மத்திய அரசின் கடமை. `பேச்சுவார்த்தை' என மீண்டும் முதலிலிருந்து தொடங்குவதா? யார் அந்தக் குமாரசாமி? தி.மு.க-வின் தயவில் பிரதமர் பதவியில் அமர்ந்து தி.மு.க-வுக்குத் துரோகம் இழைத்த தேவகவுடாவின் மகன்தான், இந்தக் குமாரசாமி. தேவகவுடா குறித்த சிறு நினைவூட்டல் எனது ஆதங்கத்துக்கான நியாயத்தை உங்களுக்குப் புரியவைக்கும் என்பதால் சிறு பகுதி மட்டும் குறிப்பிடுகிறேன்.

கர்நாடகத்துக்கு முதல்வராக இருந்த காலத்தில் தேவகவுடா, காவிரிப் பிரச்னையில் தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாகச் சேர்த்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே, அவர் பிரதமர் பொறுப்பையும் எப்படி ஏற்க முடியும்? எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு  தொடுத்தேன். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், தேவகவுடாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 1996-ம் ஆண்டு தேவகவுடாவை எதிர்த்து, `பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர்' என Quo Warranto ரிட் மனுவைத் தாக்கல் செய்தவுடன் அலறியடித்துத் தன்னுடைய மனுவைத் திரும்பப் பெற்றார். பிரதமர் பொறுப்புக்கு அவர் வந்தபின்னும் தமிழகத்தை எதிரியாகப் பார்த்தவர் தேவகவுடா.

இப்போது அவர், முன்னாள் பிரதமர் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு பொதுவான நபராக இருந்து, காவிரிப் பிரச்னையை மாநிலங்களிடையே மத்தியஸ்தம் செய்யவேண்டியவர், வாட்டாள் நாகராஜ் போல உண்ணாவிரதம் இருப்பது முன்னாள் பிரதமருக்கு அழகா? அது மட்டுமா? இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வெங்கட்ராமய்யாவும், கர்நாடகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். இப்படி அரசியல் சாசனக் கடமைகள், மரபுகள், பண்பாடுகளைக் கடைப்பிடிக்காத நபர்கள் கர்நாடகத்தில் காவிரிக்கு முரட்டுத்தனமாக அர்த்தமற்ற முறையில் நடந்துகொள்வதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

தேவகவுடா குமாரசாமி

இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினால், குமாரசாமி காவிரி நீரைத் திறந்துவிட்டு அரசியலில் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள முன்வருவாரா? தேவதூதன் ஏசுநாதர்போலத் தமிழக அரசியலில் சிலுவைச் சுமக்கும் வேடம் போடுகிறாரா? மூவடியால் உலகளந்த திருமாலாக அரசியலில் அவதாரம் எடுக்கிறாரா? சினிமாவில் தசாவதாரம் மட்டுமல்ல... சதாவதாரம்கூட எடுக்கட்டும். இது, மாநிலங்களுக்கு இடையே உள்ள சட்டப் பிரச்னை. இது, ஆள்பவர்கள் பேச வேண்டிய விஷயம்; ஆழ்வார்பேட்டையார் பேச வேண்டிய விஷயம் இல்லை. எல்லாவற்றிலும் முந்திக்கொள்வதாகக் கருதி மூக்கை உடைத்துக்கொள்ள வேண்டாம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆக முடியாது'' என்று அவர் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்