3 மாதமாகக் குடிநீர் இல்லை - நாகை அருகே தவிக்கும் 850 குடும்பங்கள்!

நாகை மாவட்டம், கொள்ளிடத்தில் உள்ள பழையாறு சுனாமி நகரில் ஏறக்குறைய 850 குடும்பங்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். இதனால் இவர்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.7-க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், கொள்ளிடத்துக்கு அருகே உள்ள கிராமமான பழையாற்றில் சுனாமி நகர் அமைந்துள்ளது. இங்கு ஏறக்குறைய 850 சுனாமி குடியிருப்புகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இது கடற்கரை பகுதி என்பதால் பெரும்பாலும் இப்பகுதியில் உவர் நீர்தான் கிடைக்கிறது. எனவே, குடிநீர் தேவைக்காக இங்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் 2 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் குழாய்கள் வைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 3 மாத காலமாக, நீர்த் தேக்க தொட்டிகளில் நீர் இல்லை. இதனால் குடியிருப்பு வாசிகளுக்குத் தண்ணீர் வழங்க முடியவில்லை. எனவே, இப்பகுதி மீனவர்கள் தண்ணீரின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உவர் நீரையே தாகத்துக்குப் பருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது பற்றி இப்பகுதி மக்கள் கூறும் போது, ``எங்களுக்குக் கடந்த மூன்று மாத காலமாக போதிய குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் தனியார் டேங்கர் லாரி மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரை ஒரு குடம் ரூ.7க்கும், குளிப்பதற்கும் மற்றும் துணிகளை துவைக்க வழங்கப்படும் நீரை ஒரு குடம் ரூ.5-க்கும் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தும் போதிய நீர் கிடைக்கவில்லை. இதைப்பற்றி அதிகாரிகளிடம் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

மின் மோட்டார் மூலமாக வரும் பொதுக்குழாய் நீரை சிலர் திருடியதே தண்ணீர்ப் பற்றாக்குறைக்குக் காரணம். எனவே, கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பிளாஸ்டிக் குழாய் மூலம் தண்ணீர் வருவதால் அதனை எளிதில் திருடி பயன்படுத்துகின்றனர். இதனால் எளிதில் தண்ணீரைத் திருடி பயன்படுத்த முடியாத வகையில் பிளாஸ்டிக் குழாய்கள் இரும்புக் குழாய்களாக மாற்றப்பட்டு தண்ணீர் வழங்கப்பட வேண்டும். அதுவரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கிராமத்தில் உள்ள 850 குடும்பங்களுக்கும் ஒரு குடும்பத்துக்கு தினமும் குறைந்தபட்சம் 5 குடங்கள் தண்ணீர் வழங்க வேண்டும். இது குறித்து ஒரு கோரிக்கையை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ளோம்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!