வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (05/06/2018)

கடைசி தொடர்பு:21:40 (05/06/2018)

கடந்த வாரம் கள்ளநோட்டு... இன்று பழைய 1,000 ரூபாய் நோட்டு: கோவையில் அடுத்தடுத்த சர்ச்சை!

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் 60 லட்சம் மதிப்புள்ள பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் 60 லட்சம் மதிப்பிலான பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1,000 ரூபாய் நோட்டு

கோவை பீளமேட்டில் தனியார் சர்வீஸ் அப்பார்ட்மென்ட் உள்ளது. இந்நிலையில், அங்கு வெங்கடேஷ் என்பவர் போக்கியத்துக்கு எடுத்திருந்த வீட்டில், தஸ்தகீர் என்பவர் வாடகைக்குத் தங்கியிருந்தார். இதையடுத்து, இன்று காலை அவரிடம் வாடகை வசூலிப்பதற்காக, வெங்கடேஷ் சென்றுள்ளார். ஆனால், அப்போது தஸ்தகீர் அங்கு இல்லை. மேலும், அங்கு கட்டுக் கட்டாகப் பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதைக் கண்டு  அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், பீளமேடு போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், 60 லட்சம் மதிப்புள்ள 1,000 ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். அதேபோல, தஸ்தகீரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தஸ்தகீரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருந்ததாக, அப்பார்ட்மென்டின் செக்யூரிட்டி தெரிவித்துள்ளார். மேலும், அவர் நேற்று இரவே அப்பார்ட்மென்டை விட்டு சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்ட விசாரணையில் தஸ்தகீர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் யார், எதற்காகக் கோவை வந்தார், பழைய ரூபாய் நோட்டுகள் யாருடையவை என்பதெல்லாம் குறித்து பீளமேடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.