`இங்கிலாந்து ஆடுகளங்கள் உங்களைச் சோதிக்கும் விராட் கோலி!’ - எச்சரிக்கும் மெக்ராத்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து தொடரில் சாதிக்கக் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். 

விராட் கோலி

இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவுக்குப் பின்னர் டெஸ்ட் தொடர் நடத்தப்பட இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்க இருக்கிறது. இங்கிலாந்து மண்ணில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் விராட் கோலி, ஆஃப்கானிஸ்தானின் முதல் டெஸ்டில் விளையாடாமல் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். 

இந்தநிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் சோபிக்க கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும் என கிளன் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ``இன்றைய சூழலில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இங்கிலாந்து ஆடுகளங்கள் எந்தப் பேட்ஸ்மேனுக்கும் சவால் அளிக்கக்கூடியவை. அவற்றின் தன்மையை நன்கு புரிந்துவைத்திருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்றோரின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள விராட் கோலி கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். கடினமாக உழைக்க அவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஆடுகளங்களில், தனது இயல்பான ஆட்டத்தை அவர் எளிதாக ஆடிவிட முடியாது. அந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் அவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதைக் காண நான் மிகவும் ஆவலாக உள்ளேன்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து பேசிய மெக்ராத், ``புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். இங்கிலாந்து ஆடுகளங்களிலும் அவர்கள் சிறப்பாகப் பந்துவீசுவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!