வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (06/06/2018)

கடைசி தொடர்பு:08:00 (06/06/2018)

பாம்பன் கடற்கரையில் இருந்து 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்த கடலோரக் காவல் படையினர்!

 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் இந்திய கடலோரக் காவல் படையினர் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர். 

 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இந்திய கடலோரக் காவல் படையினர் 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர்.

குந்துகாலில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் தூய்மை பணி செய்த கடலோரக் காவல் படையினர் 

ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் நாட்டின் முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள், தனியார் அமைப்புகள், பள்ளி மாணவ மாணவிகள் சுற்றுச்சூழலின் அவசியம் குறித்தும், மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் ஒன்றியத்தில் உள்ள அரியமான் கடற்கரைப் பகுதியில் தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் கடைப்பிடிக்கப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு தினத்தில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் மரக் கன்றுகளை நட்டார். தொடர்ந்து கடற்கரை பகுதிகளை மாணவ மாணவிகள் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்று நட்ட கலெக்டர்

பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக்  காவல்  படையினர் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். கடலோரக் காவல் படை வீரர்கள் மற்றும் அவர்களது  குடும்பத்தினர் உள்ளிட்டோர் இந்த தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்த தூய்மைப் பணியின்போது குந்துகால் கடற்கரைப் பகுதியில் குவிந்து கிடந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தினர். கடலோரக் காவல் படையின் 79 ACV பிரிவினர் மற்றும் தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் இந்திய கடலோரக் காவல் படையினருடன்  இணைந்து இந்தத் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.