தஞ்சை பெரிய கோயிலில் இடி தாக்கி சிற்பம் சேதம்...!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இடி தாக்கி கேரளாந்தகன் நுழைவு வாயிலின் சிற்பம் சேதமடைந்தது.

தஞ்சை பெரிய கோவில்

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் தஞ்சாவூரில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மாறாக கடுமையான வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினார்கள். இந்நிலையில், இன்று  மாலை 5 மணிக்கு மேல் தஞ்சைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது கடுமையான சத்தத்துடன் இடியும் இடித்தது. அப்போது இடித்த இடி தஞ்சாவூர் பெரியகோயில் நுழைவுவாயிலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில் கோபுரத்தில் விழுந்ததாகத் தெரிகிறது. இதனால், கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சுதைச் சிற்பமான வலதுபுற கீர்த்தி முகத்தில் சிறுபகுதி சேதமடைந்தது. அந்த கோபுரத்தில் இடி தாங்கி இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த பாகங்கள் கோபுரத்தின் உச்சியிலேயே சிதறின. இதில், சில கற்கள் கீழே விழுந்தன. அப்போது, இக்கோபுரத்தின் அருகில் உள்ள காலணி வைப்பகத்தில் குளிர்சாதனப் பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதுடன், மின் தடையும் ஏற்பட்டது. பெரிய கோயிலில் இடி விழுந்த சம்பவம் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதேபோல் கடந்த 2010-ம் ஆண்டு ராஜராஜன் நுழைவு வாயிலில் இடி தாக்கி கலசம் சேதமடைந்தது. 2011-ம் ஆண்டு பெருவுடையார் சந்நிதியில் இடி தாக்கி விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!