வெளியிடப்பட்ட நேரம்: 22:14 (05/06/2018)

கடைசி தொடர்பு:07:47 (06/06/2018)

`நெகிழி இல்லா தஞ்சை' - கல்லணை கால்வாயை சுத்தம் செய்த இளைஞர்கள்!

சுற்றுசூழல் தினமான இன்று தஞ்சாவூரில் காவிரி கிளை ஆறானா கல்லணை கல்வாய் ஆற்றில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டனர். அவர்களைப் பொதுமக்கள் மனதாரப் பாராட்டியதோடு அவர்கள் பணியை வாழ்த்திவிட்டும் சென்றனர். 

இளைஞர்கள்

சுற்றுச்சூழல் தினமான இன்று தஞ்சை தன்னார்வலர்கள் என்ற குழு `நெகிழி  இல்லா தஞ்சை' என்பதை உருவாக்க வேண்டும் என்பதற்காக தஞ்சை காவிரி கிளை ஆறான கல்லணை கால்வாயில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் பொருள்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இயற்கையைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கே இந்த முயற்சி என்றும் தெரிவித்தனர். அந்த இளைஞர்கள் சிலரிடம் பேசினோம், ``ஜூன் மாதம் 5-ம் தேதி சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வரும் கத்திரி வெயிலின் தாக்கமும், பருவம் மாறி பெய்யும் மழையும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை உணர்த்துகின்றன. சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்றால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தானாக முன்வந்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏன் என்றால் மனித இனத்தை தவிர வேறு யாராலும் சுற்றுச்சுழல் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் ஒருவர் குறைந்தது ஒரு மரக்கன்றாவது ஊன்றுவதுடன் அவற்றை மரமாக வளர்க்க பாடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சமீபகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது, இயற்கை விவசாய முறைகளைக் கையாளுவது, தேவை இல்லாத நேரங்களில் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பையை முற்றிலும் நாம் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உதவிபுரியும். ஆகவே, உணவகங்களுக்கு செல்லும்போது  இலைகளில் உணவு உண்பது, கடைகளுக்குச் செல்லும்போது நாம் வீடுகளில் இருந்தே துணிபையை எடுத்துச் சென்று பொருள்களை வாங்குவது உள்ளிட்ட செயல்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கு  நாம்  செய்யும் உதவியாகும். 

தஞ்சை தன்னார்வலர்கள் என இதற்காக செயல்படுகிறோம். இது அரசியல் தொடர்பான அமைப்பைச் சேர்ந்தது இல்லை. இதில் படித்த இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பலதரப்பு மக்கள்  தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இந்த முயற்சியை செய்கிறோம். எங்களது முதல் முயற்சியாக தஞ்சை கல்லணை கால்வாயில் பிளாஸ்டிக்கை முழுவதுமாக அகற்றுவதில் ஈடுபட்டோம்.  இதற்கு `நெகிழி இல்லா தஞ்சை' என்று பெயரிட்டுள்ளோம். இன்று  காலை முதலே புது ஆற்றில் இறங்கி இந்தப் பணியை தொடங்கினோம். பின்னர் இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் கிடைத்ததும் மாநகராட்சிப் பணியாளர்கள் சிலரும் எங்களுக்கு உதவியாக பணி செய்ய வந்தனர். நாங்கள் 25 பேர் கொண்ட குழு  பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி அதை மறுசுழற்சிக்காக மாநகராட்சி வண்டியில் கொட்டினோம். 

இளைஞர்கள்

தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்துக்கு தஞ்சையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இந்தப் பணியை மேற்கொள்வோம். எங்களது அடுத்த முயற்சியாக வணிகர்களை சந்தித்து கடைகளில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். கலெக்டரை சந்தித்தும் இதுபற்றி ஆலோசனை கேட்க உள்ளோம். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தும் சட்ட சபையில் பிளாஸ்டிக்கின் தீமைகள்  குறித்துப் பேச வேண்டும் என கோரிக்கை வைக்க இருக்கிறோம். முகநூலில் இதற்கான தனிப் பதிவை தொடங்கி உள்ளோம். அதில் தன்னார்வலர்கள் பலர் தங்களை இணைத்துக்கொண்டு எங்களது முயற்சிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். தொடர்ந்து பல திட்டங்களை ஒன்றிணைந்து செயல்படுத்த உள்ளோம்" என்றனர் கோரஸாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க