தமிழகத்தில் திட்டமிட்டே நீட் தேர்வு நடத்தப்படுகின்றன..! ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு

தமிழகத்தில் சிறப்பாக உள்ள மருத்துவக் கல்வியைச் சீர்குலைக்கும் வகையில் மோடி தலைமையிலான மத்தியரசு திட்டமிட்டு நீட் போன்ற தேர்வினை நடத்துகிறது என ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் மாநிலத் தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆதித்தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகைதந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தூத்துக்குடியில் கடந்த மே-22ம் தேதி,  துப்பாக்கிச் சூடு என்ற பெயரில் மிகப்பெரிய படுகொலையை மாநிலஅரசு அரங்கேற்றியுள்ளது. 

துப்பாக்கிச் சூடு நடத்திட துணை வட்டாட்சியர்கள்தாம் உத்தரவிட்டனர் என, நடந்த தவற்றை திசை திருப்புகின்ற பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் செய்து வருகின்றனர். இந்தப் படுகொலைக்கு இவர்கள் இருவரும் முழுப்பொறுப்பு ஏற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் மிகத் தாமதாக தூத்துக்குடிக்கு வந்து சினிமாவில் வசனம் பேசுவதைப் போல, ``சமூக விரோதிகள் மக்கள் போராட்டத்தில் ஊடுருவியதால்தான் கலவரம் வெடித்தது. துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தால் நாடு சுடுகாடாக மாறிவிடும்" என்றும் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ரஜினி நடித்த, ``காலா" படத்தினை ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும். அதுதான் அவருக்கு வழங்கக் கூடிய மிகச்சிறந்த பாடமாக இருக்க முடியும். துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த நிச்சயமாக ஆணை வழங்கியிருக்க வாய்ப்பே இல்லை. 

நீட் தேர்வு முடிவுகளைப் பார்க்கும் போது மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் கல்வி இறுதியாண்டில் படிக்கின்றவர்கள் 70 சதவிகிதம் தேர்வில் தோல்வி அடைந்துகொண்டிருக்கும் சூழலில், அந்த மாநிலத்தில் நீட் தேர்வில் 76 சதவிகிதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று சொல்வது உண்மைக்குப் புறம்பானதாகவும், ஏதோ ஊழல் நடந்துள்ளது போலவே தோன்றுகிறது. 

நன்றாகப் படிக்கும் மாணவர்களைக் கொண்ட தமிழகத்தின் தேர்வு விகிதம், மற்ற  மாநிலங்களை விட குறைவாகத் தெரிகிறது. இது மத்தியரசு தமிழகத்தின் மீது நடத்தும் தாக்குதல். தமிழகத்தில் மருத்துவக் கல்வி அமைப்பு முறை வலுவாகச் சிறப்பாக உள்ளது. இதனைச் சீர்குலைக்கும் வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு இதுபோன்ற தேர்வினை நடத்துகிறது.

ஏற்கெனவே நீட் தேர்வுக்காக அனிதாவை இழந்து இருக்கிறோம். இப்போது மீண்டும் பிரதீபாவின் தற்கொலை நடந்துள்ளது. இதற்கு காரணம் மத்தியரசுதான். இனி வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கும் இதுபோன்று தேர்வினைக் கொண்டு வரவுள்ளனர். இதன் உள்நோக்கம் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் முழுவதும் ஆக்கிரமிப்பது மட்டுமல்ல, மக்களை சீர்குலைப்பதற்கான வேலையைச் செய்து வருகிறது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!