வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (06/06/2018)

கடைசி தொடர்பு:04:30 (06/06/2018)

விழிஞ்ஞத்துக்கு பாறாங்கல் கொண்டுசெல்வதற்கு மீனவர்கள் எதிர்ப்பு..! கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம்

விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் அமைக்கும் வர்த்தக துறைமுகத்துக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடல் வழியாக பாறாங்கற்கள் எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நாளை நடப்பதாக இருந்த கருத்துக்கேட்புக்கூட்டம் ரத்து செய்யப்படுள்ளது.

விழிஞ்ஞத்தில் அதானி குழுமம் அமைக்கும் வர்த்தகத் துறைமுகத்துக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடல் வழியாக பாறாங்கற்கள் எடுத்துச்செல்லும் திட்டத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நாளை நடப்பதாக இருந்த கருத்துக் கேட்புக்கூட்டம் ரத்து செய்யப்படுள்ளது.

மீன்பிடித் துறைமுகம்

கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகத்திட்டப் பணியை அதானி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. துறைமுக கடலலை தடுப்பணைக்கு தேவையான பாறாங்கற்களுக்காக கேரள மலைகளை உடைக்க அம்மாநில அரசு தடை விதித்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து கடல் வழியாக மிதவை கப்பல்கள் மூலம் எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பாறாங்கற்கள் மற்றும் மண் எடுத்துச்செல்ல குமரி மேற்கு மாவட்டத்தில் அமைந்துள்ள தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மீனவ பிரதிநிதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மீன்துறை அதிகாரிகள் இன்று நடக்க இருந்தக் கூட்டத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

குறும்பனை பெர்லின்

இதுகுறித்து மீனவர் பிரதிநிதி குறும்பனை பெர்லின் கூறும்போது, "மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் அவசியமில்லை என்று மிடாலம் முதல் நீரோடி வரையுள்ள மீனவர்களும், தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுக கமிட்டி, நாம் குமரி மக்கள் பேரவை, நெய்தல் மக்கள் இயக்கம் என பல தரப்பிலிருந்தும் கண்டனக் கடிதங்கள் ஆட்சியருக்கும், மீன்வளத்துறைக்கும் அனுப்பியதால் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏதோ சிமென்ட் செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதாக கூறி மக்களை ஏமாற்ற நினைத்த அதானியின் குட்டு அம்பலமாகிவிட்டது" என்றார்.

சர்ச்சில்

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில், "தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் மூலம் பாறாங்கற்களை கொண்டு சென்றால் 1,000 விசைப்படகு மற்றும் 4,000 நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுபற்றி ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் மீனவர்கள் ஒரு மனதாக தெரிவித்தனர். தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் வழியாக கட்டுமான பொருட்கள் கொண்டுசெல்லவோ, குமரி மலைகளை அழிக்கவோ ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" என்றார்.