கோவில்பட்டியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி குருமலையில் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் தின விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு பேரணியாகச் சென்றனர். 

சுற்றுச்சூழல்

ஒவ்வோர் ஆண்டும் ஜுன் மாதம், 5-ம் தேதி, இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட நீதிபதி இளங்கோவன், நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அப்போது பேசிய அவர், ``பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்" என்றார்.

தமிழகஅரசின் வனத்துறை, சுற்றுச்சூழல்துறை, தேசியப் பசுமைப்படை சார்பில் கோவில்பட்டி அருகிலுள்ள ஊத்துப்பட்டி, குருமலை காப்பு காடுகளில் வைத்து உலகச் சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது. ஊத்துப்பட்டியில் நடந்த விழாவில் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி, ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில், கோவில்பட்டி வனச்சரகர் சிவராமன் கலந்துகொண்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடுதல், பராமரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ``பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம். மாதம் ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்கவும், சுற்றுச் சூழலுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும், சுற்றுச் சூழல் குறித்து விழிப்புஉணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்துவோம்" என மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து, ஊத்துப்பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புஉணர்வு கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர். பின்பு குருமலை காப்புக்காடு பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை அகற்றி தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு, மரக்கன்றுகளையும்  நட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!