சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவிகிதம் மானியம்! - வேளாண்மைத்துறை அறிவிப்பு!

 

சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்திட 100 சதவிகிதம் மானியத்தில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. 

இதுபற்றி வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாயிகள் பயிர் செய்யும் எந்தப் பயிருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது மிகவும் முக்கியமான பணி. நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விவசாயித்துக்கும் நீரை நவீன தொழில்நுட்பம் மூலம் சிக்கனமாகப் பயன்படுத்த முடியும். மேலும், அதிகமான நீரை பயன்படுத்துவதைவிட அளவாக பயன்படுத்தும்போதுதான் நிறைவான மகசூல் பெற முடியும் என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயத்தில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அவசியம். சிறு, குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் முழுமைக்கும் 100 சதவிகித மானியத்திலும் இதர விவசாயிகள் 75 சதவிகித மானியத்திலும் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது. அதாவது சிறு விவசாயிகள் நன்செய் நிலமாக இருந்தால் 1 ஹெக்டேர் பரப்பளவுக்கும், புன்செய் நிலமாக இருந்தால் 2 ஹெக்டேர் பரப்பளவுக்கும் எந்தப் பயிராக இருந்தாலும் என்ன இடைவெளியாக இருந்தாலும் விருப்பத்தின் பேரில் அவருக்கு சொந்தமாக இருக்கும் பரப்பு முழுமைக்கும் சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்ளலாம்.

சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளைக்கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும். விவசாயிகள் தங்களது நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க கம்ப்யூட்டர் சிட்டா அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுக வேண்டும். சிறு, குறு விவசாய சான்றினை இணைக்க வேண்டும். ஆவணங்களின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தைச் தேர்வு செய்துகொள்ளலாம். சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைக்கும் முன் விவசாயிகளின் நிலத்தை வேளாண்மை பொறியியல் துறை பொறியாளார்கள் களப்பணி மேற்கொண்டு பின்பு விலைப் புள்ளியினை டான்ஹோடா வலைதளத்தில் பதிவேற்றம் செய்வார்.

பின்பு அதன் அடிப்படையில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உரிய நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்குவார். அதில் விவசாயிகள் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுத்த நிறுவனத்துக்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும். அதற்குப் பின் விவசாயிகள் நிலத்தில் சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டுக்கு நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 1,585 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் அமைத்திட ரூ.5.41 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!