வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (06/06/2018)

கடைசி தொடர்பு:08:40 (06/06/2018)

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற நால்வர் கைது..!

 ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற டெல்லி தமிழர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற டெல்லி தமிழர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை செல்ல முயன்ற தமிழர்கள் கைது

டெல்லியில் வசித்து வரும் கமல் (26), இவரது தம்பி லோகேஷ் (24), மனைவி கங்கா (21). குழந்தை சைனி ஆகிய நால்வரும் கடந்த 10 நாள்களுக்கு முன் ராமேஸ்வரம் வந்துள்ளனர். இங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இவர்கள் இடையில் 3 நாள்கள் வேளாங்கண்ணிக்குச் சென்று வந்துள்ளனர். 

இந்நிலையில், ராமேஸ்வரம் கோயில் காவல் நிலைய போலீஸார் இவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் கமல் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரரிடம் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார். ஆனால், கமல் மீது டெல்லி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளதால் அவரால் விமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை. 

இதனால் ராமேஸ்வரம் வந்து அங்கிருந்து படகு மூலம் இலங்கை சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். இதற்கென ராமேஸ்வரம் வந்த இவர்களைச் சந்தித்த ஏஜென்ட் ஒருவர் ஒன்றரை லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு திங்கள்கிழமை இரவு படகில் இலங்கைக்கு கள்ளத்தனமாக ஏற்றிச் சென்றுள்ளார். படகு கிளம்பிய சிறிது நேரத்தில் காற்றின் வேகம் அதிகரித்ததால் அந்த படகோட்டி இவர்களை ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிக்குத் திரும்ப வந்து இறக்கிவிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கோயில் காவல் நிலைய போலீஸார் தனியார் விடுதியில் தங்கியிருந்த கமல் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.