தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதை முடக்கும் நபர்..! பொதுமக்கள் குற்றச்சாட்டு | A person stop to constructing toilet, people complaint

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (06/06/2018)

கடைசி தொடர்பு:08:20 (06/06/2018)

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதை முடக்கும் நபர்..! பொதுமக்கள் குற்றச்சாட்டு

தூய்மை இந்தியா திட்டத்தை முடக்கிய தனி நபர்.! பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

தேனி மாவட்டம் வீரபாண்டி கிழக்குத் தெருவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த பெண்களுக்கான இலவசக் கழிப்பிட கட்டடத்தை தனி நபர் ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வீரபாண்டி கிழக்குப் பகுதி மக்கள் சுமார் நானூற்றுக்கும் அதிகமானோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். எங்கள் பகுதி பெண்கள் கழிப்பிட வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்துக்கு பல மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. ஒருவழியாக எங்கள் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுக் கழிப்பிடம் கட்டிக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

உடனே வேலையும் நடந்தது. இந்நிலையில், எங்கள் பகுதியில் உள்ள கருத்தகண்ணன் மகன் முத்து என்பவர் கழிப்பறை கட்டவிடாமல் இடையூறு செய்தார். ஒரு கட்டத்தில் பணிகள் நிறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக எங்கள் பகுதி பெண்கள் எல்லோரும் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டார். பணியும் தொடங்கப்பட்டது. இந்நிலையில், முத்து, மீண்டும் பிரச்னை செய்து பணிகளை நிறுத்தினார். இச்செயலுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடந்தை.

மாவட்ட ஆட்சியர் உத்தரவையும் மீறி, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தையும் ஒரு தனி நபர் தனது சொந்த செல்வாக்கை பயன்படுத்தி முடக்க முடியும் என்றால் நாம் எப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறோம். எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சிப்பணிகளை முடக்கும் தனி நபர் தண்டிக்கப்பட வேண்டும்' என கொதிப்போடு பேசினர். இந்த விவகாரம் தொடர்பாக வீரபாண்டி பகுதியில் விசாரித்தபோது, இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க வேறு ஒரு இடத்தில் கழிப்பிடம் கட்டிக்கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஆனால், அவ்விடம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத பகுதி என்பதால் அதை ஏற்க மறுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.