துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் வீடுகளில் நடிகர் விஜய் நள்ளிரவில் ஆறுதல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நள்ளிரவில் நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். 

விஜய்
 

தூத்துக்குடியில் கடந்த 22 -ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் வைகோ, ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், பழ.நெடுமாறன், நல்லகண்ணு, முத்தரசன், சீதாராம் யெச்சூரி, கே.பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

மேலும் நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த், சரத்குமார், பாலாஜி ஆகியோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென நடிகர் விஜய் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடியில் ஸ்னோலின்,  ஜான்சி உள்ளிட்ட  உயிரிழந்தவர்களின்  வீட்டுக்கு  நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்,  தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கினார். ``பகல் நேரங்களில் வந்தால் கூட்டம் கூடும் என்பதாலும், துக்க வீடுகளில் என்னைப் பார்க்க கூட்டம் கூடினால் அது வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கும். அதனால் நள்ளிரவில் வந்தேன்."என்றாராம் விஜய். ஒவ்வொருவர் வீட்டிலும் 15 நிமிடம் வரை அமர்ந்து ஆறுதல் அளித்துப் பேசிவிட்டுக் கிளம்பியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!