``நான் வீடியோல சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சிகிட்டாங்க!"- #LMES பிரேம் ஆனந்த் பதில் #VikatanExclusive | What i told in the video was misunderstood says LMES Prem Anand

வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (06/06/2018)

கடைசி தொடர்பு:13:59 (06/06/2018)

``நான் வீடியோல சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சிகிட்டாங்க!"- #LMES பிரேம் ஆனந்த் பதில் #VikatanExclusive

பார்த்தேன். கண்டிப்பா அதுக்கும் பதில் சொல்லுவேன். நித்தியனந்த் ஜெயராமன், பியூஷ் மானுஷ் இவங்கெல்லாம் செஞ்சிட்டு இருக்குற விசயம் தலைவணங்கக்கூடியது. அவங்ககிட்ட மன்னிப்பு கேட்குறதுலகூட எனக்குப் பிரச்னை இல்லை. 

``நான் வீடியோல சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சிகிட்டாங்க!

கடந்த இரு வாரங்கள் முழுக்கவே ஸ்டெர்லைட்தான் எல்லோருடைய பேசுபொருள். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது தமிழகத்தையே உலுக்கியது. முடிவாக ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டது. இறந்த 13 பேருக்கான நீதிப் போராட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கும் வேளையில் ஸ்டெர்லைட் ஆலை மாசுபடுத்தியதற்கான அறிவியல் ஆதாரங்களுடன்கூடிய ஒரு காணொளி யூ-டியூப்பில் வைரலாகியுள்ளது. தொடர்ந்து அறிவியல் சார்ந்த காணொளிகளைப் பதிவேற்றி வரும் Lets Make Engineering Simple யூ-டியூப் சேனல் இதற்கான கள ஆய்வு செய்து தகவல்களைத் திரட்டியுள்ளது. 

ஸ்டெர்லைட்டினால் மட்டும் தூத்துக்குடி மக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதைத் தாண்டி விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் என்ற ஆலையாலும் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன எனத் தரவுகளை முன்வைக்கிறது அந்தக் காணொளி. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் பேராசிரியர் பாத்திமா பாபு, சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன் போன்றோரின் மீது விமர்சனத்தையும் முன்வைக்கிறது. மற்ற நிறுவனங்களைவிட ஸ்டெர்லைட் குறைவாகத்தான் மாசுபடுத்துகிறது என்ற கருத்து  சூழலியல் செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதுகுறித்த தெளிவான விளக்கங்கள் பெற LMES ஐச் சேர்ந்த பிரேம் ஆனந்திடம் உரையாடினோம். 

ஸ்டெர்லைட் பிரேம் ஆனந்த்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அறிவியல் ஆதாரங்களை திரட்ட வேண்டும் என்ற யோசனை எப்போது வந்தது? அதனை எப்படிச் செயல்படுத்தினீர்கள்? 

இப்படி ஒரு விஷயம் செய்யணும்னு ஒரு மாசத்துக்கு முன்னாடியே யோசனை இருந்தது. ஒவ்வொரு முறையும் ஆதாரங்களை உடைத்துக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதற்கு எதிராக உறுதியான அறிவியல் ஆய்வு அறிக்கைகளை தயார் செய்யணும்னு நினைத்தோம். சேம்பிள் டெஸ்ட் பண்றது, ஏர் குவாலிட்டி டெஸ்ட்(Air Quality Test) பண்றது எல்லாம் நம்மலாள முடிஞ்ச விஷயம்தாம். ஒன்றரை மாசம் முன்னாடியே முடிவு பண்ணித்தான் போனோம். அங்க போறதுக்கு முன்னாடி ஒரு வாரம் அதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் பண்ணிட்டுதான் போனோம். குறிப்பா எங்கே எல்லாம் என்ன மாதிரி டெஸ்ட் எடுக்கப் போறோம், என்ன பண்ணப் போறோம்னு முன்னாடியே பிளான் பண்ணியிருந்தோம். போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போதுதான் தூத்துக்குடி போனோம். ஸ்டெர்லைட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் போராட்டக்களத்தில் இருந்த மக்களிடம் பேசி அவங்ககிட்டயும் தகவல்கள் வாங்கினோம். 

சமூக வலைதளங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களில் எப்படிச் சேம்பிள் எடுக்க முடியும் என்று நிறைய கேள்விகள் எழுப்பப்படுதே! அதைப் பற்றி? 

கண்ணாடிக் குடுவையில்தான் சேம்பிள் எடுக்கணும்னு அவசியம் இல்லை. நாங்க கிளம்புறதுக்கு முன்னாடியே லேப்ல சேம்பிள் எதுல கொடுத்தா ஏத்துப்பாங்கனு கேட்டுட்டுதான் போனோம். சேம்பிள்ல ஃப்ளோரைடு இருந்தா அது கண்ணாடியில் ரியாக்ட் ஆக வாய்ப்பிருக்கு. ட்ரான்ஸ்போர்ட் வசதிக்காகப் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு போனோம். அப்புறம் கன்டெய்னர்லாம் மாத்திட்டோம். லேப் ரிசல்ட்லாம் அறிக்கையிலேயே இருக்கு. 

காற்று மாசுபாடு குறித்து எங்கெல்லாம் ஆய்வு செய்தீர்கள்? 

குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான், தூத்துக்குடியில காமராஜர் தெரு இங்கல்லாம் காற்று மாசுபாட்டு அளவைப் பரிசோதனை பண்ணோம். தூத்துக்குடி அனல்மின் நிலையம் பக்கத்துல காற்று மாசுபாட்டைப் பரிசோதனை செய்ய முடியலை. பரிசோதனையில மாசுபாடு அளவு இல்லைனுதான் ரிசல்ட் வந்திருக்கு. காற்றின் திசைதான் இதைத் தீர்மானிக்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்குள்ள போனதா சொல்லியிருக்கீங்க? உங்களை எப்படி அனுமதிச்சாங்க? 

சனிக்கிழமைகளில் பொதுமக்கள் ஸ்டெர்லைட்டைப் பார்வையிடுவதற்கான வசதிகள் இருக்கு. நாங்க உள்ள போகும்போதே எந்தக் கேமராவையும் அனுமதிக்கலை. அதனால வீடியோ எடுக்க முடியலை. 

மொத்த ஆய்வுக்குமான செலவை எப்படிச் சமாளிச்சீங்க? 

இந்த ஆய்வுக்கு மொத்தம் 2 லட்சத்துக்கும் மேல் செலவானது. மக்கள் பலரிடம் பணம் திரட்டி crowd funding மூலமாதான் இந்த ஆய்வுக்கான செலவைச் செய்துள்ளோம். 

வீடியோவின் ஆரம்பத்தில் அறிவியல்ரீதியான விஷயங்களைப் பேசப்போறோம்னு சொல்லிவிட்டு அரசியல்ரீதியான கருத்துகளை முன்வைத்தது எதனால்? இதில் ஏதும் உள்ளர்த்தம் இருக்கிறதா?

அரசியல்ரீதியான கருத்து சொல்லணும்னு நினைக்கல. அதனால்தான் அறிவியல் தரவுகளை முன்வைக்கிறேன். நீண்ட காலமா போராட்டக்களத்துல இருக்குறவங்க, சென்னையிலிருந்து மெயின்ஸ்ட்ரீம் மீடியால பார்க்குற எனக்கு இதெல்லாம் தெரியப்படுத்தலங்குற ஆதங்கம்தான் அப்படிப் பேச வைத்தது. 

போராட்டத்தைத் தூண்டிவிடுவதாக யாரைச் சொல்கிறீர்கள்? 

நான் அப்படிச் சொல்லலை. விவி குருப் நிறுவனத்தைப் பத்தி இவ்வளவு நாள் சொல்லப்படாததுக்குப் பின்னாடியும் ஓர் அரசியல் இருக்கு. இதெல்லாம் புரிஞ்சிகிட்டு போராடணும்னுதான் சொல்றேன். போராட்டத்தைத் திசை திருப்புறதுக்கு நிறைய ஆள் இருக்காங்க. தூண்டிவிடுறது அரசியல்வாதிங்களாத்தான் இருக்கும். 

ஸ்டெர்லைட்

`விவி நிறுவனத்தைப் பற்றி யாருமே பேசல, போராடல’ எனச் சொல்கிறீர்கள்? ஆனால் அதற்கு எதிராகத் தொடர்ந்து நித்தியானந்த் ஜெயராமன் உள்பட பலர் போராடிக்கொண்டிருக்கிறார்களே? 

நாம ஸ்டெர்லைட் பத்திதான் பேசிட்டு இருக்கோம். ஆனால், அந்தப் பகுதியிலேயே அதிகமா சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துறது இரண்டு நிறுவனங்கள்தாம். ஸ்டெர்லைட் மற்றும் விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ். ஸ்டெர்லைட் பத்தி பேசுற நாம விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் பத்தி யாரும் பேசலயேங்குறதுதான் என் கேள்வி. எல்லாரும் விவி மினரஸ்க்கு எதிராகத்தான் பேசுறாங்க. விவி டைட்டானியம் பிக்மென்ட்ஸ் பேக்டரி பத்தி யாருக்கும் தெரியறது இல்லை. 

உங்கள் வீடியோ பற்றி சூழலியல் செயற்பாட்டாளர்கள் பலரும் கூறியிருந்த கருத்துகளைப் பார்த்தீர்களா? 

பார்த்தேன். கண்டிப்பா அதுக்கும் பதில் சொல்லுவேன். நித்தியானந்த் ஜெயராமன், பியூஷ் மானுஷ் இவங்களாம் செஞ்சிட்டு இருக்குற விஷயம் தலைவணங்கக்கூடியது. அவங்ககிட்ட மன்னிப்புக் கேட்குறதுல கூட எனக்குப் பிரச்னை இல்லை. 

மக்களின் ஸ்டெர்லைட் போராட்டம் தவறான பாதையில் சென்றுவிட்டது என்ற தொனி தெரிந்தோ தெரியாமலோ உங்கள் காணொளியின் மூலம் வெளிப்படுவதாகச் சொல்லப்படும் கருத்து பற்றி? 

அப்படி இல்லை. நாம போராட்டம் பண்ணும்போது சூழல் மாசுபாடு செய்ற எல்லாருக்கும் எதிராகத்தான் போராடணும்னு சொல்ல வந்தேன். ஆனா அது தப்பா புரிந்துகொள்ளப்பட்டிருக்கு. அந்த விஷயத்துல என் மேலதான் தவறு. நான் சொல்ல நினைக்குற விஷயத்தை தெளிவா மத்தவங்ககிட்ட சொல்லணும். அதுக்குத் தெளிவான பதிலோட இன்னொரு வீடியோ போடுவேன். தவறான விஷயத்தைப் பகிர்ந்திருந்தா மன்னிப்புக் கேட்குறதுல கூட பிரச்னை இல்லை. இந்த விஷயத்தை நீர்த்துப் போக வைக்க நான் இந்த வீடியோ பண்ணவில்லை. 


டிரெண்டிங் @ விகடன்