``எங்க ஊர் பள்ளிக்கூடம் எங்க ஊர்லதான் இருக்கணும்!" - போராடும் பெற்றோர்கள் | "Our school should locate in our village only" say protesting parents

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (06/06/2018)

கடைசி தொடர்பு:09:50 (06/06/2018)

``எங்க ஊர் பள்ளிக்கூடம் எங்க ஊர்லதான் இருக்கணும்!" - போராடும் பெற்றோர்கள்

திருப்பூர் அருகே ஏற்கெனவே இயங்கிக்கொண்டு இருந்த அரசுப் பள்ளியை புதிய கட்டடத்துக்கு மாற்றியதை எதிர்த்து பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் செய்துவருவது பரபரப்பை உண்டாக்கி உள்ளது

``எங்க ஊர் பள்ளிக்கூடம் எங்க ஊர்லதான் இருக்கணும்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அமைந்துள்ளது அறிவொளி நகர்ப் பகுதி. 1993-ம் ஆண்டு திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு உருவாக்கித் தந்த பகுதி இது. இங்கு 1993 -ம் ஆண்டு முதல் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பின்னர், அப்பகுதி மக்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2012- ஆண்டு முதல் தொடக்கப்பள்ளி வளாகத்துக்கு அருகிலேயே அரசு உயர்நிலைப் பள்ளியும் அமைக்கப்பட்டது.

அறிவொளி நகரில் கடந்த 8 ஆண்டுகளாக இயங்கிவந்த இப்பள்ளிக் கட்டடத்தை மூடிவிட்டு, தற்போது ஆறுமுத்தாம்பாளையம் என்ற பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கட்டடத்துக்குப் பள்ளியை இடம் மாற்றியுள்ளனர். இது, அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கூடம்

``தினமும் அறிவொளி நகரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆறுமுத்தாம்பாளையத்துக்குப் பிள்ளைகளை அனுப்புவது இயலாத காரியம். எனவே, பள்ளியை மீண்டும் பழைய இடத்திலேயே இயங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரை எங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை'' என்று முடிவெடுத்திருக்கிறார்கள் அறிவொளி நகர் மக்கள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஊர்மக்கள், ``அறிவொளி நகரில் சிறுபான்மையின மக்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும்தாம்  அதிகமாக வசிக்கிறோம். எல்லாருமே அன்றாடக் கூலியை நம்பித்தான் வாழ்க்கையை நடத்துகிறோம். பெரும்பாலும் வீட்டில் அப்பா - அம்மா இருவருமே வேலைக்குச் சென்றால்தான் நாலு காசு பார்க்க முடியும் என்கிற நிலைமை இருக்கிறது. இங்கே அறிவொளி நகரில், குடியிருப்புகளுக்கு மத்தியில்தான் உயர்நிலைப் பள்ளி இயங்கிக்கொண்டு வந்தது. தினமும் நாங்கள் சீக்கிரமே எழுந்து வேலைக்குப் போய்விட்டாலும், எங்கள் குழந்தைகள் தானாகவே கிளம்பி எளிதாகப் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் இப்போது பள்ளிக்கூடத்தைக் கொண்டுபோய் பக்கத்து ஊரில் வைத்துவிட்டு, ஒட்டுமொத்த பிள்ளைகளையும் அங்கே போய்ப் படிக்கச் சொல்வது எந்த வகையில் நியாயம்? தினமும் அறிவொளி நகரிலிருந்து ஆறுமுத்தாம்பாளையத்துக்குக் குழந்தைகளைக் கொண்டுபோய் விடுவதற்கும், அழைத்துக்கொண்டு வருவதற்கும் பெற்றோரில் ஒருவர் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் வீட்டில் ஒருவர் மட்டும் வேலைக்குப் போய் சம்பாதித்தால் வாய்க்கும், வயிற்றுக்கும் எப்படிப் போதுமானதாக இருக்கும்? 

மாணவர்கள்

இது ஒருபுறமிருந்தால், மறுபுறம் இந்தப் பள்ளிக்கூடத்துக்குப் புதிதாகக் கட்டடம் கட்டத்தான் அரசாங்கம் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், எங்கள் ஊரில் அந்தப் பள்ளிக் கட்டடத்தைக் கட்டாமல் பக்கத்து ஊரில் போய் கட்டினார்கள். அப்போதே, ஊர்மக்கள் எல்லாரும் எதிர்ப்புத் தெரிவித்தோம். அதற்குப் பள்ளி நிர்வாகத்தினர், `இந்தப் பள்ளியை எப்பவும் மூடமாட்டோம். பசங்க 10-வது வரைக்கும் இங்க படிச்சிட்டு, 11, 12 - ம் வகுப்புகளுக்கு மட்டும் ஆறுமுத்தாம்பாளையத்துக்கு வந்தா போதும்' என்று சொல்லி எங்களைச் சமாளித்தனர். அதை நாங்களும் நம்பினோம். இப்போது விடுமுறை முடிந்து, ஜூன் 1-ம் தேதி மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று பார்த்தால், அதற்குள் ஒட்டுமொத்த பள்ளியையும் ஆறுமுத்தாம்பாளையத்துக்கு மாற்றிவிட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் காரணம் கேட்டதற்கு, `நாங்க எதுவும் சொல்ல முடியாது. எல்லாம் அரசாங்கத்துகிட்ட போய்க் கேளுங்க' என்று பதில் சொல்லிவிட்டனர். அதனால், எங்கள் குழந்தைகளை கலெக்டர் ஆபீஸுக்கு அழைத்துக்கொண்டு போய் மனு கொடுத்தோம். `அதிகாரிகளை விட்டு விசாரிக்கிறோம்' என்று கலெக்டர் பதில் சொல்லிருக்கார். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மறுபடியும் எங்கள் ஊருக்குள்ளேயே இந்தப் பள்ளிக்கூடம் வரவேண்டும்'' என்றனர் கவலையுடன்.

பழைய கட்டடம்

இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஞானசவுந்தரியிடம் விளக்கம் கேட்டோம். ``மத்திய அரசின், `அனைவருக்கும் இடைநிலைக் கல்வி' என்ற திட்டத்தின்கீழ் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. கட்டடம் கட்டுவதற்கான நிதியை மத்திய அரசு வழங்கிவிடும். அதற்கான நிலத்தை மட்டும் மாநில அரசு தர வேண்டும். ஆரம்பத்தில் அறிவொளி நகர்ப் பகுதியில்தான் இடம் தேடினோம். ஓர் இடத்தில் நீர்நிலைகள் அருகில் இருந்ததாலும், மற்றோர் இடத்தில் மின்கம்பிகளால் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததாலும் அங்கு கட்டடம் கட்ட அரசு அனுமதிக்கவில்லை. அதனால்தான் முன்னாள் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் பழனிச்சாமியின் முயற்சியால் ஆறுமுத்தாம்பாளையத்தில் இடம் கிடைத்தது. இப்போது அறிவொளி நகரிலிருந்து மாணவர்கள் இங்கு தினமும் வந்து செல்வதற்காகப் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர இருக்கிறோம். பஸ் பாஸ்களும்கூட வழங்கிவிடுவோம். கல்வித்துறை அதிகாரிகளும் அந்தப் பெற்றோர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அதனால் மாணவர்கள் கல்வி பெறுவதில் எந்தவிதச் சிக்கலும் இருக்கப்போவதில்லை'' என்றார்.

மாணவர்களின் கல்வியிலா அரசாங்கம் அலட்சியம் காட்டவேண்டும்?


டிரெண்டிங் @ விகடன்