வெளியிடப்பட்ட நேரம்: 09:14 (06/06/2018)

கடைசி தொடர்பு:09:14 (06/06/2018)

சுற்றுலாப் பயணிகளுக்கு சுருளி அருவியில் வந்தாச்சு சைக்கிள்..!

சுற்றுலாப்பயணிகளுக்கு சுருளி அருவியில் வந்தாச்சு சைக்கிள்.!

சைக்கிள் திட்டததை துவக்கி வைத்த ஆட்சியர்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது சுருளி அருவி. மருத்துவகுணம் மிக்க அருவியாக கருதப்படும் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் எப்போதும் படையெடுத்து வருவர். சுருளி அருவியானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை உள்ளது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பொருள்களை எடுத்துச் செல்ல துணிப்பைகள் வழங்கப்படும். வனத்துறையின் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் மட்டுமே அருவியை அடையமுடியும் என்ற சூழலில், அருவிக்குச் செல்ல வாகன வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் பல நாள் கோரிக்கை. அந்த வகையில் கட்டணத்துடன் கூடிய பேட்டரி கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், நாள்கள் செல்ல அந்த பேட்டரி காரும் பழுதானது. அதைத் தொடர்ந்து வனத்துறையின் சார்பில் வேன் வசதி செய்யப்பட்டது. நபர் ஒருவருக்கு 10 ரூபாய் வீதம் கட்டணம் பெறப்பட்டது. இந்நிலையில், நேற்று (5.6.2018) சுருளி அருவிக்குச் செல்ல வனத்துறை சார்பில் சைக்கிள் வசதி மாவட்ட கலெக்டரால் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கெனவே இருக்கும் ஒரு பேட்டரி கார் போல மற்றொரு கார் அறிமுகம் செய்யப்படும் என்றும், அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் இனி சிரமப்படத் தேவையில்லை எனவும்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார். ஒரு மணி நேரத்துக்கு என கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.