வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (06/06/2018)

கடைசி தொடர்பு:10:10 (06/06/2018)

மேகமலைப் பகுதியில் ஒரு டன்னுக்கும் மேல் குப்பையை அகற்றிய மாணவர்கள்!

அனுமதித்த வனத்துறை அகற்றிய மாணவர்கள்.! மேகமலை பரிதாபம்.

மாணவர்கள்

மேகமலை வன உயிரின சரணாலயத்தை மையப்படுத்தி பல்வேறு வனக்குற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது அதிகரித்து வருவது மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளும். மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இவர்களால் வனத்தின் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சான்று நேற்று நடைபெற்ற மேகமலையை சுத்தம் செய்யும் பணி. சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று மேகமலைச் சாலையின் இருபுறமும் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றினர்.

தென்பழனி முதல் ஹைவேவிஸ் வரையிலான 32 கிலோமீட்டர் சாலையின் இருபுறங்களிலும் சுற்றுலாப் பயணிகளால் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள், மதுபாட்டில்களை மாணவர்கள் அகற்றினர். மொத்த குப்பைகள் ஒரு டன்னுக்கும் மேல் எடை கொண்டது. கடும் கட்டுப்பாடுகளை விதித்து அனுதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகளால் மேகமலைச் சாலையின் இரு புறமும் ஒரு டன் குப்பைகளைக் குவிக்க முடியும் என்றால், மேகமலையின் மையப்பகுதியில், யானைகள், காட்டுமாடுகள் இயல்பாக சுற்றும் பகுதிகளில் எவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மதுபாட்டிகள் கொட்டப்பட்டிருக்கும்? என கேள்வி எழுப்புகிறார்கள் வனவிலங்கு ஆர்வலர்கள். வனத்துறையின் சோதனைச்சாவடிகளில் முறையாக சோதனைகள் செய்தால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான மேகமலை காக்கப்படும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.