வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (06/06/2018)

கடைசி தொடர்பு:09:46 (06/06/2018)

``காலா படத்தை எதிர்ப்பது சரியில்லை” - கன்னடத்தில் கோரிக்கை வைத்த ரஜினி!

கர்நாடகா மாநிலத்தில் காலா படம் வெளியாவது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

காலா ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வெளியாகும் படம் காலா. காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனத் தமிழகத்துக்கு ஆதரவாகப் பேசினார். இதற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் காலா குறிப்பிட்ட நேரத்தில் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் காலா வெளியிடுவது தொடர்பாக நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தனுஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ``படத்தை வெளியிடுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. படம் வெளியாகும் திரையரங்கங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என அம்மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, ``காலா படம் கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. அங்கு மட்டும் வீம்புக்கு ரிலீஸ் செய்யவில்லை. உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. காவிரி விவகாரத்தில் நான் கருத்து தெரிவித்ததற்காகப் படத்தை வெளியிடாமல் இருப்பது சரியில்லை. அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் காலா படத்தை எதிர்க்கும் கன்னட அமைப்புகள் காலா பட விவகாரம் தொடர்பாக என்னை வந்து சந்திக்கலாம். திரைப்பட வர்த்தக சபை படத்தை எதிர்ப்பது ஆச்சர்யமாக உள்ளது. அவர்கள்தாம் படத்தைச் சிக்கல் இல்லாமல் வெளியாக  தேவையானவற்றை செய்ய வேண்டும். அவர்களே தடை விதிப்பது சரியில்லை. காலா வெளியாகும் திரையரங்கங்களுக்குப் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் குமாரசாமி  உரிய பாதுகாப்பு வழங்குவார் என நம்புகிறேன்” எனப் பேசினார். இறுதியில் கன்னட அமைப்புகளுக்கும் கர்நாடக அரசுக்கும் ரஜினி கன்னடத்தில் பேசி கோரிக்கை வைத்தார்.