வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (06/06/2018)

கடைசி தொடர்பு:10:58 (06/06/2018)

புழல் சிறையிலிருந்து விடுதலையான மகிழ்ச்சியுடன் வந்த 67 ஆயுள் கைதிகள்!

 புழல் சிறையில் இருந்து வெளியே வந்த ஆயுள் கைதிகள்

தமிழக அரசு அறிவித்துள்ளபடி சென்னை புழல் சிறையிலிருந்து 67 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மகிழ்ச்சியுடன் வந்த அவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர்.

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்’ என்று அறிவித்தார். இதன்படி 67 கைதிகளை விடுதலை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.

அதில், ``எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்துவரும் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்தது. இதுதொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியும் உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் படியும் நெறிமுறைகள் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டன. 25.2.2018 அன்று 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை புழலில் உள்ள மத்திய சிறைச்சாலையிலிருந்து 67 கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பிவைத்தனர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடியவர்களை அவர்களின் உறவினர்கள் கட்டித்தழுவி மகிழ்ந்தனர். விடுதலையான சந்தோஷத்தில் கைதிகள் தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.