வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (06/06/2018)

கடைசி தொடர்பு:11:41 (06/06/2018)

'கீழே இறங்குங்கள்' - நீட் தோல்வியால் 10-வது மாடியிலிருந்து குதித்து உயிரைவிட்ட ஹைதராபாத் மாணவி

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால்  மன உளைச்சல் அடைந்த ஹைதராபாத்  மாணவி ஒருவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட்

தெலுங்கானா மாநிலம் பர்கத்புரா பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்லின் கவுர். 18 வயதான இவர், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியானது. நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் வரும் என எதிர்பார்த்த ஜாஸ்லினுக்கு, ஏமாற்றமே காத்திருந்தது.  நீட் தேர்வுமுடிவுகள் வெளியான நாளிலிருந்தே ஜாஸ்லின் மன உளைச்சலுடனே காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹைதராபாத் மாநிலம்  ஏபிட்ஸ் பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு காலை 10.30 மணிக்குச் சென்ற அவர் 10-வது மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது, மாடியின் கீழே நின்றவர்கள், மாணவியிடம் இறங்குமாறு குரல் கொடுத்துள்ளனர். இதை கேட்காமல் அவர் திடீரென அங்கிருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி-யில் அவர் உயிரை மாய்த்துக்கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி ஓஸ்மானியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து அவரது பெற்றோர் கூறுகையில், 'ஜாஸ்லினுடைய மதிப்பெண் குறித்து தங்களுக்குத் தெரியவில்லை எனவும், அவருடைய நண்பர்களிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

நீட் தேர்வில் தோல்வியைத் தழுவிய தமிழகத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா மற்றும் டெல்லி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஜாஸ்லினும் இறந்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.