வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (06/06/2018)

கடைசி தொடர்பு:12:21 (06/06/2018)

கொள்ளையனுடன் போராடிய பெண் இன்ஸ்பெக்டர்! நள்ளிரவு திக்... திக் நிமிடங்கள்

நள்ளிரவில் தன்னந்தனியாகப் போராடி பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், கொலையாளியைப் பிடித்துள்ளார். இதனால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது. 

பெண் இன்ஸ்பெக்டர்

சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, துணிச்சலுக்குப் பெயர் போனவர். சம்பவத்தன்று இரவு ரோந்துப் பணிக்காக போலீஸ் வாகனத்தில் ராஜேஸ்வரி ஐ.சி.எஃப் பகுதியில் சென்றார். போலீஸ் வாகனத்தை டிரைவர் பிரபு ஓட்டினார்.

போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் வாலிபர் ஒருவர் பைக்கை எடுத்துக்கொண்டு ஓட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த ராஜேஸ்வரி, அந்த வாலிபரை விரட்டினார். திடீரென அந்த வாலிபர் கத்தியை எடுத்து அவரை மிரட்டினார். நள்ளிரவில் தன்னந்தனியாக வாலிபருடன் ராஜேஸ்வரி போராடினார். இந்தக் காட்சியைப் பார்த்ததும் டிரைவர் பிரபு, பதறியடித்துக் கொண்டு அங்கு ஓடி வந்தார். அதற்குள், வாலிபரின் கையிலிருந்த கத்தியை லகுவாக தட்டிப்பறித்தார் இன்ஸ்பெக்டர். அடுத்த சில நிமிடங்களில் ராஜேஸ்வரியின் கிடுக்குப்பிடியில் அந்த வாலிபர் சிக்கினார். பிறகு வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரின் பெயர் சஞ்சீவ்குமார், அயனாவரத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சஞ்சீவ் குமார், ப்ளஸ் டூ வரை படித்துள்ளார். அவரின் தந்தை சம்பத்தை கடந்த 2010-ம் ஆண்டில் அயனாவரத்தைச் சேர்ந்த கார்த்திக் கொலை செய்துள்ளார். அதற்குப் பழிக்குப் பழி வாங்க கார்த்திக்கை கடந்த 4-ம் தேதி கே.கே. நகர் பகுதியில் வைத்து கத்தியால் குத்தியுள்ளார் சஞ்சீவ்குமார். கார்த்திக்கின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் சஞ்சீவ்குமார். இந்த நிலையில், சஞ்சீவ் குமாரின் அண்ணன் சுப்பிரமணி சஞ்சீவ், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து 2017ல் குரங்கு வினோத்தை கொலை செய்தார். இந்த வழக்கில் கைதான சுப்பிரமணி சஞ்சீவ் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இதனால் குரங்கு வினோத்தின் நண்பன் ஜ.சி.எஃப் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த அருண், சுப்பிரமணி சஞ்சீவ்வை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் சுப்பிரமணி சஞ்சீவ் தப்பிவிட்டார். தந்தையைக் கொன்ற கார்த்திக்கை கத்தியால் குத்திய சஞ்சீவ் குமார், அண்ணனைக் கொலை செய்ய முயன்ற அருணை தீர்த்துக்கட்ட ஐ.சி.எஃப் ரயில்வே குடியிருப்பு பகுதியில் காத்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் அவரை நாங்கள் கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து இரண்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன'' என்றனர். 

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் பேசினோம். "ரோந்துப் பணியில் சென்றபோது ஐ.சி.எஃப் ரயில்வே குடியிருப்பின் அருகில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நள்ளிரவில் நின்றுகொண்டிருந்தார். என்னைப்பார்த்ததும் அந்த வாலிபர் பைக்கை ஸ்டார்ட் செய்துகொண்டு தப்பி ஓட முயன்றார். இதனால் காரிலிருந்து இறங்கி அந்த வாலிபரை விரட்டினேன். என் கையில் சிக்கிய அந்த வாலிபர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார். அதைத் தடுத்து அவரைப் மடக்கிப் பிடிக்க முயன்றபோது கத்தியால் குத்த முயன்றார். இதனால் கத்தியைக் கீழே தட்டிவிட்டேன். அதன்பிறகு, மீண்டும் பைக்கில் அவர் தப்பி ஓட முயன்றார். இதனால் பைக்கை தடுத்து நிறுத்தியதோடு மடக்கிப் பிடித்தேன். என்னுடைய பிடியிலிருந்து தப்பிக்க அவர் திமிறினார். அதற்குள் டிரைவர் பிரபும் வாலிபரை பிடித்துவிட்டார்" என்றார். 

சஞ்சீவ் குமாரைப் பிடிக்கவில்லை என்றால் அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அதை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தடுத்துள்ளார்.  நள்ளிரவில் தன்னந்தனியாக கொலையாளியுடன் துணிச்சலாக போராடிய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, டிரைவர் பிரபு ஆகியோரை நேரில் அழைத்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.