வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (06/06/2018)

கடைசி தொடர்பு:12:37 (06/06/2018)

`உதவிசெய்தால் பிழைப்பேன்' - 21 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான ஆயுள் கைதி உருக்கம்

ஆயுள் கைதி

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 21 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான ஆயுள் கைதி ஒருவர், ``காவல்துறை அதிகாரிகள் உதவி செய்தால் கடை வைத்துப் பிழைத்துக்கொள்வேன்" என்று உருக்கமாக கூறினார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்துவரும் ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேரை தமிழக அரசு விடுதலை செய்தது. அவர்கள் சென்னை புழல் சிறையில் இருந்து இன்று வெளியே வந்தனர். அவர்களுக்கு தேவையான பொருள்களை ஒரு பையில் சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்து வழியனுப்பிவைத்தனர்.

அப்போது கைதிகள் மத்தியில் பேசிய சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா, ``சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்தது. அதன்படி கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் குற்ற வழக்கில் சிக்கினால் மீண்டும் சிறைக்கு வர நேரிடும். கைதிகள் மீண்டும் தவறு செய்யாமல் இருக்க வேலைவாய்ப்புகள் செய்து கொடுக்கப்படும்" என்று கூறினார்.

21 ஆண்டுகளுக்கு பின் விடுதலையான கைதி

இதைத் தொடர்ந்து, சிறையில் இருந்த குறித்து கைதி ஒருவர் கூறுகையில், ``சிறையில் இருந்த காலகட்டத்தில் பல தொழில்களை கற்றுக்கொண்டேன். சிறை வார்டன்கள், அதிகாரிகள் எங்களை நன்றாக நடத்தினார்கள். வெளியே சென்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறீர்கள். என்னிடம்  தன்னம்பிக்கை இருக்கிறது. உழைப்பு இருக்கிறது. சிறைத்துறை அதிகாரிகள் உதவி செய்தால் சொந்தமான கடை வைத்துப் பிழைப்பேன். சிறையில் நோய்வாய்பட்டபோது நன்றாக சிறை அதிகாரிகள் கவனித்தார்கள். உணவு வகைகளைச் சிறப்பாக செய்துகொடுத்தார்கள். 21 ஆண்டுகளுக்குப் பிறகு என் குடும்பத்துடன் சேரப்போகிறேன். என் குடும்பத்தார் அனைவரும் சந்தோஷமாகத்தான் பார்க்கிறார்கள்" என்று உருக்கமாகக் கூறினார்.