வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (06/06/2018)

கடைசி தொடர்பு:13:28 (06/06/2018)

`காலாவால் 15 கோடி நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை!' - கர்நாடக தூதுக்கு ரஜினி பதில் #VikatanExclusive

`காவிரிப் பிரச்னையில் நான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்க முடியாது. யாரிடமும் மன்னிப்பும் கேட்க முடியாது' எனக் கன்னட நடிகர் ராஜ்குமாரின் உறவினரிடம் நேற்று உறுதியாகக் கூறியிருக்கிறார் ரஜினி என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். 

டிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம், நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. காவிரி விவகாரத்தை முன்னிறுத்தி காலா படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கர்நாடக அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. `காவிரி பிரச்னையில் நான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்க முடியாது. யாரிடமும் மன்னிப்பும் கேட்க முடியாது' என ரஜினி, கன்னட நடிகர் ராஜ்குமாரின் உறவினரிடம் உறுதியாகக் கூறியிருக்கிறார் என்கின்றனர் ரஜினி ஆதரவாளர்கள். 

ரஜினிகாந்த்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தை வெளியிடுவதற்கு, கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகள் மிரட்டல் விடுத்தன. `காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக நடிகர் ரஜினி குரல் கொடுத்ததால், எக்காரணம் கொண்டும் காலா படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்' என உறுதியாகக் கூறிவிட்டனர். இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷின் வொண்டர்பார் நிறுவனம். அந்த மனுவில், `காலா படத்துக்குச் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, காலா படத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றமும், `காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது. அதேநேரம், இதுகுறித்துப் பேட்டியளித்த முதல்வர் குமாரசாமி, `கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதே நல்லது. முதலமைச்சராக உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். இது என்னுடைய பொறுப்பாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் படத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. வெளியிடுவதால் அதன் விளைவுகளைப் படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும்' எனப் பேசியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை ரஜினிகாந்த்தை போயஸ் தோட்டத்து வீட்டில் சந்தித்தார் கன்னட நடிகர் ராஜ்குமாரின் வாரிசு ஒருவர். இந்தச் சந்திப்பில் கர்நாடகாவில் நிலவும் அசாதாரண சூழல்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். 

குமாரசாமிநேற்று நடந்த விவாதத்தில், `உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். காவிரி விவகாரத்தில் உங்களிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம். நீங்கள் சொல்லப்போகும் பதிலை, முதல்வர் குமாரசாமியின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன். படத்தை வெளியிடுவதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்' என நடிகர் ராஜ்குமாரின் வாரிசு கூற, இதற்குச் சற்றுக் கோபத்தோடு பேசியிருக்கிறார் ரஜினி. அவர் பேசும்போது, `நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். என்னுடைய கருத்திலிருந்து பின்வாங்க முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது' எனக் கூற, `உங்கள் கருத்தைச் சொன்னால் போதும். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என ராஜ்குமாரின் வாரிசு உறுதியாகப் பேசியிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த ரஜினி, ``வேண்டாம். உங்கள் முயற்சிக்கு நன்றி. கர்நாடகாவில் காலா வர்த்தகம் பாதிக்கப்பட்டால், எனக்கு 15 கோடி ரூபாய் நஷ்டமாகும். இந்த நஷ்டத்தை நான் பார்த்துக்கொள்கிறேன். காவிரி பிரச்னையில், நான் மன்னிப்புக் கேட்காமல் இருந்தால், தமிழ்நாட்டு அரசியலில் அது எனக்கு உரமாக மாறும். `காவிரிக்காக 15 கோடி ரூபாய் நஷ்டப்பட்டார் ரஜினி' எனத் தமிழக மக்கள் பேசட்டும். 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என நான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை. 

கர்நாடக அரசியலில் நடப்பதைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். மாநிலக் கட்சிபோலவும் சாதிக்கட்சி போலவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் குமாரசாமி. இந்த விவகாரத்தில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் பார்வையும் தவறாகத்தான் இருக்கிறது. காலா படம் குறித்து குமாரசாமி பேசிய வார்த்தைகளைக் காங்கிரஸ் தலைவர்களும் கண்டிக்கவில்லை. தேசியக் கட்சியான பா.ஜ.க-வும் இதுவரையில் குமாரசாமியைக் கண்டிக்கவில்லை. பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிக்கு இடையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் குமாரசாமி. என்னுடைய படம் வெளியாக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் நல்லவர்தான். மற்றபடி, கர்நாடக சினிமாவைச் சேர்ந்த சிலருக்கு என்னைப் பிடிப்பதில்லை.

தமிழ்நாட்டில் கன்னட நடிகர்களின் படங்களுக்குப் பெரிய மார்க்கெட் என்றுமே இருந்ததில்லை. இந்தச் சூழல் காலம்காலமாக நீடித்து வருகிறது. பொதுவாக, `என்னுடைய படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகக் கூடாது' எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தாம் இப்படியெல்லாம் செய்வார்கள். இதே பாணியில் இப்போது கர்நாடகாவில் உள்ளவர்களும் செய்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்ல; வேறு சில காரணங்களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். நான் நியாயமாகவும் மனசாட்சிப்படியும்தான் கருத்து சொன்னேன். இந்தக் கருத்திலிருந்து நான் பின்வாங்கப்போவதில்லை. இதை உங்கள் முதல்வரிடமும் சொல்லிவிடுங்கள்' எனத் தெளிவாகக் கூறியிருக்கிறார் ரஜினி. ``இப்படியொரு கருத்தை நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளும் எதிர்பார்க்கவில்லை" என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகிகள்.