வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (06/06/2018)

கடைசி தொடர்பு:14:02 (06/06/2018)

6 பேரின் உடல்களும் இன்று மாலைக்குள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் - கலெக்டர் தகவல்

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி துப்பாக்கிக்சூட்டில் பலியானவர்களில் மீதமுள்ள  6 பேரின் உடல்களும், பிரேதப் பரிசோதனை  செய்யப்பட்டு இன்று மாலைக்குள்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 


 

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிசூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் உடல்களை மீண்டும் உடற்கூறாய்வு செய்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழரசன், சண்முகம், கந்தையா, ஸ்னோலின், செல்வசேகர், கார்த்திக்  காளியப்பன்  ஆகிய 7 பேர்களின் உடல்களை ஜிப்மர் மருத்துவமனை டாக்டர் அம்பிகா பிரசாந்த் பத்ரா மற்றும் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர்  தூத்துக்குடி  குற்றவியல்  நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மறு உடற்கூறாய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து 7 பேர் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியான மீதமுள்ள ரஞ்சித்குமார், மணிராஜ், அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி மற்றும்  ஜெயராமன் என 6 பேரின் உடலை உடற்கூறாய்வு செய்து, உறவினர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து  ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த வினோத் செளத்ரி மற்றும் இரண்டு அரசு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர், மாவட்ட நீதிபதிகள் முன்னிலையில் இன்று காலை 10.35 மணி முதல் 6 பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி "இன்று  மாலைக்குள் 6 பேரின் உடலையும் பிரேதப் பரிசோதனை செய்து அவர்களின்  குடும்பத்தினரிடம்  ஒப்படைக்கப்படும்" என தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க