Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

பேப்பர் போடுபவர் முதல் பால் சப்ளையர் வரை... பெட்ரோல் விலையேற்றம் எவ்வளவு பாதித்திருக்கிறது?

Coimbatore: 

'தங்கத்துக்குத் தினசரி விலை நிர்ணயம் செய்வதுபோல, பெட்ரோல், டீசலுக்கும் தினசரி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்' என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்ததால், நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முன்பு, 15 நாள்களுக்கு ஒரு முறை, நமது ரத்த அழுத்தத்தை எகிற வைத்த பெட்ரோல், டீசல் விலை தற்போது தினசரி எகிற வைக்கிறது.

பெட்ரோல்

மத்திய அரசு, இந்த முறையைக் கொண்டுவந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி இந்த முறையை அமல்படுத்தியபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 57 ரூபாயாகவும் இருந்தது. தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 82 ரூபாயாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 72 ரூபாயாகவும் உள்ளது. இந்த ஓராண்டில், பெட்ரோலின் விலை 14 ரூபாயும், டீசலின் விலை 15 ரூபாயும் அதிகரித்துள்ளன. `தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வதுபோல' என்று கூறியதால், தங்கத்தின் விலையைப் போலவே, பெட்ரோல், டீசல் விலையும் ஏறிக்கொண்டே இருக்கிறது.

உணவில்லாமல் கூட வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஒருநாள்கூட வாழ முடியாது என்று கூறுவார்கள். அந்தப் பட்டியலில், பெட்ரோல், டீசல் எப்போதோ இணைந்துவிட்டன. அந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் பெட்ரோல், டீசலின் பயன்பாடு கலந்துவிட்டது. நம் பிரதமரைப் போல, விமானத்திலேயே பறந்துகொண்டிருந்தாலோ அல்லது தமிழக எம்.எல்.ஏ-க்களைப் போல 100 சதவிகிதச் சம்பள உயர்வு கிடைப்பவர்களாக இருந்தாலோ, இந்த விலை உயர்வைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், பால்க்காரர்கள், பேப்பர் போடுபவர்கள், டோர் டெலிவரி செய்பவர்கள், கலெக்‌ஷன் வேலை செய்பவர்கள் என வீட்டிலிருந்து கிளம்பிய உடனே, பெட்ரோல் பங்க்-ல் காலடி எடுத்து வைப்பவர்கள்தாம் இங்கு அதிகம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இவர்களின் பொருளாதாரத்தில் கடுமையான நெருக்கடியைச் சந்திக்க வேண்டிவருகிறது.

தினேஷ்

``நான் இந்த வருஷம்தான், பி.காம் முடிச்சேன். காலேஜ் ஃபீஸ் கட்டலாம்னுதான் பேப்பர் போட ஆரம்பிச்சேன். 3 வருஷமா பேப்பர் போட்டுட்டு இருக்கேன். வேலை தேடிட்டு இருக்கேன். இன்னும் கிடைக்கல. இதுல வர்றதுதான் என் வருமானமே. எனக்கு, மாசம் 2,000 ரூபாய் சம்பளம். பேப்பர் போடறதுக்கு, டெய்லி 11 கி.மீ வண்டி ஓட்டணும். மாசத்துக்கு 700 ரூபாய் பெட்ரோலுக்கே போய் விடுகிறது. எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. வீட்லதான் இருக்காரு. அம்மாவும், அண்ணாவும் வேலைக்குப் போறாங்க. அவங்க சம்பளத்துலதான் குடும்பம் ஓடுது. பெட்ரோல் விலையேற்றத்துக்கு முன்னாடி, குடும்பதுக்கு என்னால முடிஞ்சளவுக்கு ஏதாவது உதவி பண்ணிட்டு இருந்தேன். இப்ப அதுவும் இல்ல" என்கிறார் கோவையைச் சேர்ந்த தினேஷ்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ராஜேஷ், ``நான் ஸ்கூல் படிக்கறப்ப இருந்து பேப்பர் போட்டுட்டு இருக்கேன். இப்ப 6 வருஷம் ஆச்சு. தனியார் நிறுவனத்துல வேலை செஞ்சாலும், இதுல வர இன்கம சேவிங்ஸ் பண்ணலாம்னுதான், இப்பவும் பேப்பர் போட வர்றேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடிவரை, நானும் பைக்லதான் பேப்பர் போட்டுட்டு இருந்தேன். ஆனா, எங்க வேலைக்குத் தினசரி 7 கி.மீ பைக் ஓட்டணும். எனக்குக் கிடைப்பதே 2,000 ரூபாய்தான். அதுல, பெட்ரோல் போட்டா டெய்லி 50 ரூபாயாவது செலவு பண்ணணும். எனவே, கட்டுப்படி ஆகாதுன்னு, பைக்கை விட்டுட்டு இப்ப சைக்கிள்ல பேப்பர் போட்டுட்டு இருக்கேன். எப்படியாவது பெட்ரோல் விலை கம்மியாச்சுன்னா போதும்" என்கிறார்.

ராஜேஷ்

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு குடும்பத் தலைவர், ``எனக்கு வயசு 33. கல்யாணம் ஆகி, பையன் 3-வது படிக்கறான். கிடைக்கற வேலை எல்லாம் செஞ்சு குடும்பத்த ஓட்டணும்னுதான் பேப்பர் போட வந்தேன். டெய்லி 8 கி.மீ சுற்றி, 70 வீடுகளுக்கு பேப்பர் போடறேன். இந்த வேலைய சீக்கிரம் முடிச்சாதான், நான் ஆபீஸ் போக முடியும். போகும்போது மனைவியை அவங்க ஆபீஸ்ல விட்டுட்டு, பையன ஸ்கூல்ல விடற பொறுப்பும் எனக்கு இருக்கு. அதுக்காகத்தான் பைக்ல பேப்பர் போட்டுட்டு இருந்தேன். எனக்கு 1,500 ரூபா சம்பளம். அதுல முக்கால்வாசி தொகை பெட்ரோலுக்கே போய் விடுகிறது. இதனால, இப்ப வாரத்துல ரெண்டு அல்லது மூணு நாள்தான் பைக்ல போய் பேப்பர் போடறேன். மத்த நாள்ல எல்லாம் சைக்கிளில்தான் பேப்பர் போடறேன்" என்றார்.

முருகன்

சாய்பாபா காலனி காய்கறி மார்க்கெட் அருகே, லோடு ஆட்டோ ஓட்டும் முருகன், ``நான் 10 வருஷமா லோடு ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். முதல்ல டாடா ஏஸ் வெச்சுருந்தேன். வாடகை டிரைவரும் இருந்தாரு. ஆனா, டீசல் விலை நமக்குக் கட்டுப்படி ஆகல. தினமும் நான் 40 கி.மீ வண்டி ஓட்டணும். முன்னாடி, 200 ரூபாய்க்கு டீசல் போட்டா போதும். இப்ப ஒரு நாளுக்கு 400 ரூபாய் வரை டீசல் போட வேண்டியிருக்கு. இதனால, டாடா ஏஸ்-யைக் கொடுத்துட்டேன். வாடகைக்கு வெச்சிருந்த டிரைவரையும் வேலைய விட்டு நிறுத்திட்டேன். இப்ப 80 ரூபா இருக்கற விலை, நாளைக்கு 100 ரூபா ஆகும். அப்புறம், 10 லிட்டர் டீசல் போட்டாலே, 1,000 ரூபா போயிடும். ஸ்டேண்ட் வாடகை எல்லாம் இப்ப கம்மி ஆகிடுச்சு. இப்ப இருக்கற நிலைமைக்கு, புதுசா எல்லாம் வண்டி வாங்க முடியாது. பெட்ரோல், டீசல் விலை கம்மியானால் மட்டுமே எங்கள மாதிரியான ஆட்கள் பொழப்பு நடத்த முடியும்" என்றார்.

பழனிசாமி

10 ஆண்டுகளாக, வீடுகளுக்குச் சென்று பால் ஊற்றி வரும் பழனிசாமி, ``நான் கூலிக்குத்தான் வேலை செய்யறேன். ஒரு நாளைக்கு, நான் 100 கி.மீ வண்டி ஓட்டணும். எனக்கு, 450 ரூபா சம்பளம். தினமும் பெட்ரோலுக்கே 150 ரூபா போய்டுது. மீதிய வெச்சுத்தான் குடும்பத்த ஓட்டிட்டு இருக்கேன். நாம என்ன சொல்லி... என்ன பயன் இருக்கு? அவங்க விலையை ஏத்திக்கிட்டேதான் இருப்பாங்க. இது எங்கள மாதிரி வேலைகள் செய்யறவங்களுக்கு எவ்ளோ பெரிய இடையூறு? நம்ம புலம்பிக்கிட்டே வேலை செய்ய வேண்டியதுதான்" என்று அங்கலாய்த்தபடியே, டி.வி.எஸ் வண்டியில் ஏறி அடுத்த தெருவை நோக்கி நகர்ந்தார்.

இப்படி உழைக்கும் மக்கள்மீது, பெட்ரோல், டீசல் மூலம் பொருளாதார நெருக்கடி கொடுப்பதுதான் புதிய இந்தியாவின் நோக்கமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement