இனி கூடுதல் லக்கேஜ் எடுத்து வந்தால் 6 மடங்கு அபராதம் - ரயில்வே எச்சரிக்கை!

அனுமதிக்கப்பட்ட அளவைவிட இனி ரயில்களில் கூடுதல் லக்கேஜ்களை எடுத்து வந்தால் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது. 

ரயில்

இந்தியாவில் ரயில்வே பயணம் எப்போதும் கூட்டம் நிறைந்தவையாக இருக்கும். வடமாநிலங்களிலிருந்து தென் மாநிலங்கள் வரை எப்போதும் ரயில்களில் கூட்டம் அதிகரித்தே காணப்படும். நீண்ட தூரமோ குறைந்த தூரமோ ரயில்களில் பயணம் செய்யும்போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று லக்கேஜ். அது ஏ.சி வகுப்பாக இருந்தாலும் சரி, அல்லது முன்பதிவு செய்யப்படாத வகுப்பாக இருந்தாலும் சரி பயணிகள் அனைவரும் எதிர்கொண்டு லக்கேஜ் தொந்தரவுகளைச் சந்தித்திருப்போம். இதற்கிடையே, ரயில்களில் பயணம் மேற்கொள்ளும்போது அதிகமாக லக்கேஜ்களை எடுத்து வருகின்றனர். இதனால் சக பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படுகிறது என ரயில்வே-க்கு புகார் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்தப் புகாருக்கு ரயில்வே தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி வேத் பிரகாஷ் கூறுகையில், ``விமான நிலையத்தில் பின்பற்றப்படுவது ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் ஒருவர் குறிப்பிட்ட அளவே லக்கேஜ் எடுத்து வர வேண்டும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே வழக்கத்தில் உள்ளது. எனினும், அது தீவிரமாகக் கடைப்பிடிக்கவில்லை. இதனால் பயணிகளிடம் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதை, இனி தீவிரமாகக் கடைப்பிடிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட இனி கூடுதலாக லக்கேஜ் எடுத்துவரக் கூடாது. அவ்வாறு எடுத்துவந்தால் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும். இந்நடைமுறை இந்த மாதத்திலிருந்தே தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும். அனைத்து ரயில்நிலையங்களிலும் லக்கேஜ் குறித்து சோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். 

பயணிகள் கொண்டு செல்லக்கூடிய லக்கேஜ் அளவு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏ.சி முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவர் 70 கிலோ வரை இலவசமாகவும் கட்டணம் செலுத்தி கூடுதலாக 80 கிலோவும் எடுத்து வரலாம். ஏ.சி இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவர் கட்டணமின்றி 50 கிலோவும் கட்டணத்துடன் கூடுதலாக 50 கிலோவும் எடுத்து வரலாம். இரண்டாம் வகுப்பு படுக்கையில் பயணிப்பவர் கட்டணமின்றி 40 கிலோவும் கட்டணத்துடன் கூடுதலாக 40 கிலோவும் எடுத்து வரலாம். இதேபோல் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணிப்பவர் கட்டணமின்றி 35 கிலோவும் கட்டணத்துடன் கூடுதலாக 35 கிலோவும் எடுத்து வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!